Published : 29 Apr 2017 09:39 AM
Last Updated : 29 Apr 2017 09:39 AM

கட்டாய வெற்றியில் பெங்களூரு: புனே அணியுடன் இன்று மோதல்- தோல்வியடைந்தால் லீக் சுற்றுடன் வெளியேறும்

ஐபிஎல் தொடரில் இன்று மாலை 4 மணிக்கு புனேவில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதுகின்றன.

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 9 ஆட்டங்களில் 2 வெற்றி 6 தோல்விகளை பெற்றுள்ளது. ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டம் மழை காரணமாக ரத்தானதால் 5 புள்ளிகளுடன் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டம் உட்பட பெங்களூரு அணிக்கு இன்னும் 5 ஆட்டங்கள் எஞ்சி உள்ளது.

இதில் அனைத்திலும் அந்த அணி வெற்றி பெற்றாலும் 15 புள்ளிகளே பெறும். இந்த நிலையை அந்த அணி எட்டினாலும் மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு உருவாகக்கூடும். இதனால் பெங்களூரு அணியின் அடுத்த கட்ட வாய்ப்பு மங்கிய நிலையிலேயே உள்ளது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி தோல்வியை தழுவினால் நிச்சயம் தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும்.

டி20 என்பது எந்த விஷயத்தையும் விரைவாக மாற்றுவதற்கான வடிவிலான ஆட்டமாகும். மேலும் பெங்களூரு அணி உலகத் தரம் வாய்ந்த பேட்டிங் வரிசையை கொண்டுள்ளதால் அந்த அணி தனக்கான வாய்ப்பை எளிதில் இழந்து விடாது என்றே கருதப்படுகிறது. விராட் கோலி, கிறிஸ்கெய்ல், டிவில்லியர்ஸ் ஆகியோர் எந்தவிதமான பந்து வீச்சையும் சிதைத்து, தாக்குதல் ஆட்டத்தால் ரன்குவிக்கும் திறன் கொண்டவர்கள். இதனால் இவர்கள் முடிந்தவரை வெற்றிக்காக போராடக்கூடும்.

ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான புனே அணி, பெங்களூருவை விட சற்று மேலான நிலையில் உள்ளது. அந்த அணி 8 ஆட்டங்களில் தலா 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. ஒரு சில ஆட்டங்களில் மிகச்சிறப்பாக விளையாடும் புனே அணி திடீரென மிகச்சாதாரணமாக விளையாடி தோல்வியை தழுவுகிறது.

தொடர்ச்சியாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது அணியின் பின்னடைவாக உள்ளது. தொடக்க வீரரான ராகுல் திரிபாதி சீராக ரன் சேர்த்து வருகிறார். இவர் 6 ஆட்டத்தில் 216 ரன்கள் சேர்த்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 154.28 ஆக உள்ளது. 24 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் விளாசி உள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

இதேபோல் 275 ரன்கள் குவித்துள்ள கேப்டன் ஸ்மித்தும் பேட்டிங்கில் வலுசேர்ப்பவராக உள்ளார். ரஹானேவுக்கு இந்த தொடர் இதுவரை சிறப்பானதாக அமையவில்லை. ஒரு ஆட்டத்தில் மட்டும் அரை சதம் அடித்துள்ளார். கடந்த சில ஆட்டங்களாக அதிரடியாக விளையாடி வரும் தோனி மீண்டும் விளாசக்கூடும்.

ரூ.14.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் பலம் சேர்க்கிறார். மும்பை அணிக்கு எதிராக கடைசி கட்டத்தில் அற்புதமாக பந்துவீசி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார். ஆனால் பேட்டிங்கில் பென் ஸ்டோக்ஸ் எதிர்பார்த்தளவுக்கு பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை.

8 ஆட்டத்தில் அவர் 127 ரன்களே சேர்த்துள்ளார். இதனால் ரன்கள் குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். பந்து வீச்சில் இம்ரம் தகிர், ஜெயதேவ் உனத்கட், ஷர்துல் தாக்குர் ஆகியோர் தடுமாறி வரும் பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடித்தரக்கூடும்.



இடம்: புனே, நேரம்: மாலை 4

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x