Published : 02 Jun 2017 05:10 PM
Last Updated : 02 Jun 2017 05:10 PM

சூப்பர் ஸ்டார் கலாச்சாரம், இரட்டை ஆதாயப் பதவி: கிரிக்கெட் கமிட்டியிலிருந்து ராஜினாமா செய்த ராமச்சந்திர குஹா குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றம் நியமித்த பிசிசிஐக்கான நிர்வாகிகள் கமிட்டியின் உறுப்பினர் ராமசந்திர குஹா தன் பதவியை ராஜினாமா செய்ததற்கு பல காரணங்களை கடிதம் மூலம் விளக்கியுள்ளார்.

உச்ச நீதிமன்றம் நியமித்த கிரிக்கெட் நிர்வாகிகள் கமிட்டியிலிருந்து பிரபல கிரிக்கெட் வரலாற்றறிஞர், கட்டுரையாளர், ஆசிரியர், எழுத்தாளரான ராமச்சந்திர குஹா ராஜினாமா செய்ததற்கு பிசிசிஐ நிர்வாகத்தின் செயல்பாடுகளின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியே காரணம் என்று கூறியுள்ளார்.

கிரிக்கெட் நிர்வாகிகள் குழு என்பது மேற்பார்வை அமைப்பு, ஆனால் பிசிசிஐ தினசரி நிர்வாகத்தைக் கவனிப்பது வேறு நிர்வாகிகள் குழுவே, இதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருப்பதாக ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார். ஆனால் உச்ச நீதிமன்றம் நியமித்த நிர்வாகிகள் குழு திருப்திகரமாகச் செயல்படாமல் பல விஷயங்களில் முந்தைய நிலைமையே தொடர்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கிரிக்கெட் கமிட்டி தலைவர் வினோத் ராய்க்கு எழுதிய கடிதத்தின் சுருக்கம் வருமாறு:

உச்ச நீதிமன்றம் நியமித்த நிர்வாகிகள் குழுவில் நான் உங்களுடனும் டயானா மற்றும் விக்ரம் ஆகியோருடன் பணியாற்றியதை பெரிய கவுரவமாகக் கருதுகிறேன். இது கற்றல் அனுபவமாக அமைந்தது...

இரட்டை ஆதாயப் பதவி விவகாரம்:

கமிட்டி தனது பணியைத் தொடங்கியதிலிருந்தே இரட்டை ஆதாயப் பதவி குறித்த பிரச்சினை பேசப்படவேயில்லை. நான் இணைந்ததிலிருந்தே இந்தப் பிரச்சினையை எழுப்பி வந்துள்ளேன்.

உதாரணமாக பிசிசிஐ சில தேசியப் பயிற்சியாளர்களுக்கு சிறப்புச் சலுகைகளை வழங்குகிறது. தேசிய அணிக்காக கடமையாற்ற 10 மாத ஒப்பந்தம் பயிற்சியாளரக்ளுக்கு அளிக்கிறது. இதன் மூலம் மீதமுள்ள 2 மாதங்களுக்கு அந்தப் பயிற்சியாளர் ஐபிஎல் அணிகளில் பயிற்சியாளராக, ஆலோசகராகப் பணியாற்ற உதவி புரிகிறது. இதுவும் தற்காலிகமான, தன்னிச்சையான முறையில் செய்யப்படுகிறது. இதில் குறிப்பாக முன்னாள் வீரர் பயிற்சியாளராகும் போது அவரது பிரபலத்தைப் பொறுத்து அவர் தனது ஒப்பந்தத்தை அவரே உருவாக்கிக் கொள்ள பிசிசிஐ அனுமதிக்கிறது. அதாவது எந்த அளவுக்கு இந்த முன்னாள் வீரர்-பயிற்சியாளர் புகழ்பெற்றுள்ளாரோ அதை வைத்துதான் ஒப்பந்தம் தீர்மானிக்கப்படுகிறது. இதில் ஓட்டைகள் இருப்பதால் அதனை பயன்படுத்தி இரட்டை ஆதாயப் பதவி எனும் விவகாரத்தை சாமர்த்தியமாக மறைத்து இவர்கள்ஆதாயமடைவது நடந்து வருகிறது.

லோதா கமிட்டியின் உணர்வுக்கு எதிராக பயிற்சியாளர்கள், துணைப்பயிற்சியாளர்கள், ஆகியோர் தேசிய கிரிக்கெட் அகாதெமியில் இருந்து கொண்டே ஐபிஎல் ஒப்பந்தங்களிலும் ஈடுபடுகின்றனர். ஒருவர் இத்தகைய இரட்டை ஆதாயத்தை வைத்துக் கொள்ள முடியாது. இதன் மூலம் இரண்டுக்கும் அவரால் நியாயம் செய்ய முடியாது. கிளப் சார்ந்த நடவடிக்கைகளைக் காட்டிலும் தேசிய அணி சார்ந்த நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இதனை நான் பலமுறை எழுப்பியுள்ளேன், இதனால்தான் தேசியப் பணியில் உள்ள பயிற்சியாளர்கள், துணைப் பணியாளர்கள் ஆகியோருக்கு சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் அப்போதுதான் இவர்கள் இரட்டை ஆதாயப் பதவிகளை ஏற்பதை தடுக்க முடியும் என்று நான் கூறிவந்துள்ளேன்.

இது குறித்து நான் எனது பிப்ரவரி 7 மின்னஞ்சலில் தங்கள் பார்வைக்குக் கொண்டு வந்தேன்:

“இந்திய அணி ஒப்பந்தத்தில் இருக்கும் அல்லது தேசிய கிரிக்கெட் அகாதெமியில் இருக்கும் எந்த ஒருவரும் ஐபிஎல் அணிக்கும் பணியாற்ற முடியாது.

பிசிசிஐ அதன் அலட்சியத்தினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ இந்த இரட்டை ஆதாயம் பெறும் விதமாக பயிற்சியாளர் ஒப்பந்தத்தை வரைந்திருக்கலாம். இது அறமற்றது, அணி உணர்வுக்கு எதிரானது. இதனால் பயிற்சியாளர்களிடையே பொறாமையும் வயிற்றெரிச்சலும் ஏற்படும் என்பதோடு இந்திய கிரிக்கெட் நலன்களுக்கு எதிரிடையானது.

எனவே பயிற்சியாளர்கள் ஒப்பந்தத்தில் உள்ள இந்த ஓட்டைகளை விரைவில் அடைக்க வேண்டும் என்று பிசிசிஐ இடம் கோருகிறேன்.

என்று மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தேன், ஆனால் இன்று வரை நடவடிக்கை இல்லை. உச்ச நீதிமன்றம் நியமித்த கிரிக்கெட் நிர்வாகிகள் குழுவிடமிருந்து இதற்கு எதிரான உத்தரவுகள், வழிகாட்டுதல்கள் இல்லாமையால் ஏற்கெனவே இருக்கும் நிலைமைகள் தொடர்வதற்கு வழிவகுத்துள்ளது .

இரண்டாவதாக, பிசிசிஐ ஒப்பந்தத்தில் உள்ள வர்ணனையாளர்கள் வீரர்களின் ஏஜெண்டுகளாகவும் ஒரே சமயத்தில் செயல்படுகின்றனர்.

சுனில் கவாஸ்கர் இந்திய கிரிக்கெட் வீரர்களை பிரதிநிதித்துவம் செய்யும் நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். பிசிசிஐ ஒப்பந்த வர்ணனையாளர்கள் குழுவிலும் இருக்கிறார். இது மிகத்தெளிவான இரட்டை ஆதாயப் பதவி விவகாரமாகும். ஒன்று அவர் பிஎம்ஜி நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை உதற வேண்டும் அல்லது பிசிசிஐ வர்ணனையாளர் ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும்.

நான் இது பற்றி பலமுறை நடவடிக்கைக் கோரியும் கமிட்டி வாளாவிருந்து வந்துள்ளது.

சூப்பர்ஸ்டார் கலாச்சாரம்:

பிசிசிஐ நிர்வாகம் சூப்பர்ஸ்டார் வீரர்களைக் கண்டு இவர்களே பிரமித்து விதிமுறைகளை அவர்கள் மீறும்போது கேள்வி கேட்பதில்லை. இது குறித்து பிசிசிஐ நிர்வாகிகள் விருப்புரிமை அதிகாரத்தை தங்கள் கைகளில் வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். ஆகவே தாங்கள் ஆதரிக்கும் பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் ஆகியோர் தங்களுக்கு கடமைப்பட்டவர்கள் போன்றும், தங்கள் தகிடுதத்தங்களை இவர்கள் கண்டுக் கொள்ளக்கூடாது என்ற வகையிலும் நடைபெற்று வருகிறது. இதனை உச்ச நீதிமன்றம் நியமித்த நிர்வாகிகள் குழு கவனித்தேயாக வேண்டும், நாமே ஒரு கிரிக்கெட் வீரரின் கடந்தகால, நிகழ்கால சாதனைகளைக் கண்டு மிரண்டு விடக்கூடாது. மாறாக நியாயமாகவும் நீதிபூர்வமாகவும் நாம் நடந்து கொள்ள வேண்டும்.

மாநில கிரிக்கெட் வாரியங்களிலும் இரட்டை ஆதாயத்திற்கான பதவி வகித்தல் விவகாரம் அதிகமாக உள்ளது. ஒரு புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரரை ஊடகங்கள் செயல்திறமுள்ள வீரர்கள் பற்றி கருத்து கூற ஒப்பந்தம் செய்துள்ளது. அவர் தனது மாநில கிரிகெட் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். மற்றும் சிலர் ஒரு சங்கத்தில் நிர்வாகிகளாக உள்ளனர், அதே வேளையில் மற்றொரு சங்கத்தில் மேலாளராகவும் பயிற்சியாளராகவும் உள்ளார். வர்த்தக ஒப்பந்தங்களை நண்பர்கள், உறவினர்களுக்கு வழங்குவது பரவலாகிவிட்டது.

சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் இந்திய அணி வீரர்கள் ஒப்பந்தங்களையும் திரித்து விட்டுள்ளது. தோனிக்கு “ஏ” ரக ஒப்பந்தம் வழங்குவது தவறான முன்னுதாரணம் என்று நான் எச்சரித்திருந்தேன், காரணம் அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து தானே ஓய்வு பெற்று விலகியவர். அவருக்கு எந்த அடிப்படையில் “ஏ” கிரேடு ஒப்பந்தம் வழங்க முடியும்? தோனி இந்திய கேப்டனாக இருக்கும் போதே இந்திய வீரர்கள் பலர் பிரதிநிதித்துவம் செய்த ஒரு நிறுவனத்தின் கூட்டாளியாகவும் இருந்துள்ளார். இது நிறுத்தப்பட வேண்டும், நாம் தான் இத்தகைய போக்குகளை நிறுத்த வேண்டும்.

அனில் கும்ப்ளே விவகாரம்:

இந்திய அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே விவகாரத்தைக் கையாண்ட விதம் சிக்கலுக்குரியது. இந்திய அணி இந்த சீசனில் சாதனைகள் பல செய்தது. இதற்கான பெருமை வீரர்களுக்குத்தான் செல்ல வேண்டும் என்றாலும் தலைமைப்பயிற்சியாளர், உதவிப்பயிற்சியாளர்களுக்கும் பங்கு உண்டு. திறமையையும் நீதியையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பு, தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை நீட்டிக்க வேண்டும். ஆனால் இங்கு கும்ப்ளே நிலை தொங்கிக் கொண்டிருக்கிறது.

நிச்சயம் இந்த விவகாரம் எந்த ஒரு உணர்வுமின்றி தொழில்பூர்வத்தனமையின்றி கையாளப்பட்டுள்ளது. இதில் கிரிக்கெட் நிர்வாகக் கமிட்டி மவுனம் காத்ததும் செயலின்மையில் இருந்ததும் பெரும் பங்கு வகித்தது, இன்னும் சொல்லப்போனால் இதில் உடன்பட்டுள்ளது நிர்வாகிகள் கமிட்டி. சரி கும்ப்ளேவுக்கு மாற்று தேட வேண்டுமெனில் ஏன் ஐபிஎல் நடக்கும் போதே இதற்கான நடவடிக்கைகளில் இறங்கவில்லை? கேப்டனும், பயிறியாளரும் உடன்படாமல் செல்கின்றனர் என்றால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் முடிந்த போதே ஏன் இந்த விவகாரத்தை கையில் எடுக்கவில்லை? ஏன் ஒரு முக்கிய தொடருக்காக அணி செல்லும் போது கடைசி நேரத்தில் கையாளப்பட வேண்டும்?

தலைமைப் பயிற்சியாளர் மீது மூத்த வீரர்களுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது என்ற ஒரு போக்கை உருவாக்கியிருப்பதும் சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் தாறுமாறாக ஊடுருவியுள்ளதன் உதாரணம்தானே? இத்தகைய வீட்டோ அதிகாரம் எந்த நாட்டிலும் எந்த ஒரு விளையாட்டிலும் எந்த ஒரு வீரருக்கும் கிடையாது. ஏற்கெனவே சர்வதேச விதிமுறைகளுக்கு இணங்காமல் தற்போதைய இந்திய வீரர்கள் வர்ணனையாளர்கள் குழுவில் யார் இடம்பெற வேண்டும் என்பதற்கான வீட்டோ அதிகாரத்தையும் தங்கள் வசம் வைத்துள்ளனர். வர்ணனையாளர்கள் குழுவை வீரர்கள் தீர்மானிக்கின்றனர், யார் பயிற்சியாளர் என்பதையும் மூத்த வீரர்கள் தீர்மானிக்கின்றனர் என்றால் அடுத்து அணித்தேர்வுக்குழு, நிர்வாகிகள் ஆகியோரும் இந்தப் பட்டியலில் தொடரும்தானே?

அழிந்து கொண்டிருக்கும் உள்நாட்டு கிரிக்கெட்:

மேற்கூறிய விவகாரங்களை விட மிக முக்கியமானது உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் நடத்தப்படும் விதம். அதாவது ரஞ்சி டிராபிக், முஷ்டாக் அலி டிராபி மற்றும் பிற மாநிலங்களுக்கு இடையேயான தொடர்களில் ஆடும் வீரர்கள், அந்தத் தொடர்களின் நிலை சரியாக இல்லை. ஐபிஎல் என்பது இந்திய கிரிக்கெட்டின் காட்சிப்பொருளாக இருக்கலாம். அது உற்பத்தி செய்யும் பெரிய அளவிலான வருவாய் இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டை வளப்படுத்தப் பயன்படுத்தப்பட வேண்டும். நிறைய வீரர்கள் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டையே ஆதாரமாகக் கொண்டுள்ளனர். எனவே ஒரு வலுவான இந்திய அணி அமைய உள்நாட்டுத் தொடர்கள் வலுவாக இருக்க வேண்டும், இதற்கு உள்நாட்டு வீரர்கள் சவுகரியமாக இருக்க வேண்டும்.

ரஞ்சி கிரிக்கெட் ஆட்ட ஊதியம் மிகக்குறைவாக இருப்பது அதிர்ச்சிகரமாக உள்ளது. (விளையாடும் நாட்களில் நாளொன்றுக்கு ரூ.30,000). மேலும் ஆட்டத்தொகைக்காக பிசிசிஐ வழங்கும் காசோலை சில சமயங்களில் மாநில கிரிக்கெட் சங்கங்களினால் பாஸ் செய்யப்படுவதில்லை. ’’

இந்த விவகாரங்கள் மீது கவனம் செலுத்த முடியாததற்குக் காரணம் நம் கிரிக்கெட் நிர்வாகிகள் கமிட்டியில் மதிப்பிற்குரிய மூத்த ஆண் கிரிக்கெட் வீரர் ஒருவர் இல்லாததே என்று நம்புகிறேன். எனவே நிர்வாக அனுபவம் உள்ள ஒரு கிரிக்கெட் வீரரை நான் விட்டுச் செல்லும் இடத்தில் நியமிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.

இவ்வாறு தன் கடிதத்தில் கூறியுள்ளார் ராமச்சந்திர குஹா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x