

திருச்சியில் நடைபெற்று வரும் மாநில இளையோர் வாலிபால் போட்டியில் ஆண்கள் பிரிவில் தஞ்சை, திருவாரூர் அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறின. பெண்கள் பிரிவில் சென்னை அணி அரை இறுதியில் நுழைந்தது.
திருச்சி மாவட்ட வாலிபால் சங்கமும், சாரநாதன் பொறியியல் கல்லூரியும் இணைந்து மாநில அளவிலான இளையோர் வாலிபால் போட்டிகளை கடந்த 7-ம் தேதி முதல் நடத்தி வருகின்றன. ஆண்கள் பிரிவில் 27, பெண்கள் பிரிவில் 22 அணிகளும் பங்கேற்றுள்ள இப்போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் சாரநாதன் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றன.
ஆண்கள் பிரிவின் முதல் ஆட்டத்தில், திருநெல்வேலி அணி 25-16, 25-14, 25-18 என்ற புள்ளி கணக்கில் கடலூர் அணியை வென்றது. அதைத்தொடர்ந்து, திருவாரூர் அணி 25-22, 25-17, 25-17 என்ற புள்ளிக் கணக்கில் சேலம் அணியையும், கிருஷ்ணகிரி அணி 20-25, 25-21, 25-13, 25-22 என்ற புள்ளிக் கணக்கில் கோவை அணியையும், தஞ்சை அணி 28-26, 19-15, 22-25, 25-20, 15-12 என்ற புள்ளிக் கணக்கில் திருச்சி அணியையும் வென்றன.
பெண்கள் பிரிவில் காஞ்சிபுரம் அணி 25-20, 23-25, 22-25, 25-13, 15-8 என்ற புள்ளிக் கணக்கில் கோவை அணியையும், ஈரோடு அணி 25-15, 25-17, 25-12 என்ற புள்ளிக் கணக்கில் தர்மபுரி அணியையும், சேலம் அணி 25-9, 25-4, 25-8 என்ற புள்ளிக் கணக்கில் பெரம்பலூர் அணியையும், சென்னை அணி 20-25, 25-16, 25-16, 25-14 என்ற புள்ளிக் கணக்கில் நாகை அணியையும் வென்றன.
இன்று நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியின் ஆண்கள் பிரிவில் திருநெல்வேலி -திருவாரூர் அணிகளும் மற்றொரு ஆட்டத்தில் கிருஷ்ணகிரி - தஞ்சை ஆகிய அணிகளும் மோதுகின்றன. பெண்கள் பிரிவில் நடைபெறும் அரை இறுதி ஆட்டம் ஒன்றில் காஞ்சிபுரம் - ஈரோடு அணிகளும் மற்றொரு ஆட்டத்தில் சேலம் - சென்னை அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. அரை இறுதி ஆட்டங்களின் முடிவை தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு இறுதி போட்டிகள் நடத்தப்படுகிறது.