Last Updated : 03 Jul, 2016 11:29 AM

 

Published : 03 Jul 2016 11:29 AM
Last Updated : 03 Jul 2016 11:29 AM

பிரான்ஸ்-ஐஸ்லாந்து இன்று பலப்பரீட்சை

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு செயின்ட் டெனிஸ் நகரில் நடைபெறும் கடைசி காலிறுதியில் போட்டியை நடத்தும் பிரான்ஸ், ஐஸ்லாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது.

3 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் தொகையை மட்டுமே கொண்ட ஐஸ்லாந்து நாட்டை சேர்ந்த அணி தனது அறிமுக தொடரிலேயே பிரமாதமாக விளையாடி வருகிறது. நாக் அவுட் சுற்றில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்திருந்தது. மேலும் லீக் சுற்றில் போர்ச்சுக்கல், ஹங்கேரிக்கு எதிராக 1-1 என டிரா கண்ட அந்த அணி ஆஸ்திரியாவை 2-1 என வீழ்த்தியிருந்தது.

3-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் கனவுடன் உள்ள பிரான்ஸ் அணிக்கு இன்றைய ஆட்டத்தில் ஐஸ்லாந்து கடும் சவால் கொடுக்கும் என்றே கருதப்படுகிறது. ஐஸ்லாந்தின் கோல்கீப்பர் ஹால்டர்சன், ரேக்னர் சைகர்ட்சன், ஆரோன் குனார்சன், கில்ஃபி சைகர்ட்சன், கோல்பீன் சிதர்சன் ஆகியோர் பிரான்ஸ் வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும்.

பிரான்ஸ் அணி லீக் சுற்றில் ருமேனியா, அல்பேனியா அணிகளை வீழ்த்தியிருந்தது. இந்த இரு ஆட்டத்திலும் கடைசி பகுதியிலேயே பிரான்ஸ் கோல் அடித்திருந்தது. நாக் அவுட் சுற்றில் அயர்லாந்தை 2-1 என்ற கோல்கணக்கில் வென்றிருந்தது.

இன்றைய ஆட்டத்தில் பிரான்ஸ் அணியில் தடை காரணமாக அடில் ராமி, கோலோ ஹன்டி களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக சாமுவேல் உம்தி, லாரன்ட் கோஸின்லி ஆகியோர் களமிறங்குகின்றனர்.

பிரான்ஸ் அணியின் தற்காப்பு வீரர் பாகரி சக்னா கூறும்போது, “ஐஸ்லாந்து அணி காலிறுதி வரை முன்னேறி வருவதற்கு தகுதியானதுதான். தகுதிச் சுற்றில் அந்த அணி பலம் வாய்ந்த நெதர்லாந்து, செக் குடியரசு உள்ளிட்ட அணிகளை வீழ்த்தியுள்ளது. தரம் வாய்ந்த அந்த அணியை நாம் குறைத்து மதிப்பிட முடியாது” என்றார்.

சர்வதேச போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 11 ஆட்டங்களில் மோதி உள்ளன. இதில் பிரான்ஸ் 8-ல் வெற்றி பெற்றுள்ளது. 3 ஆட்டங்கள் டிரா வில் முடிவடைந்துள்ளன. இந்த ஆட்டங்களில் பிரான்ஸ் 30 கோல் களும், ஐஸ்லாந்து 8 கோல்களும் அடித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x