

தரம்சலா டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் நாயகனாக ரவீந்திர ஜடேஜாவைக் கூறலாம். அவர் தைரியமான அரைசதத்துடன் பந்துவீச்சிலும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆஸி. அணியை தன் கைக்குள் வைத்திருந்தார்.
இந்நிலையில் அவர் சில சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்:
இந்த சீசனில் ஜடேஜா 6 அரைசதங்களை எடுத்துள்ளார். விராட் கோலி, விஜய், ராகுல் ஆகியோரும் 6 அரைசதங்களையே எடுத்துள்ளனர், புஜாரா மட்டுமே 12 அரைசதங்களை எடுத்துள்ளார்.
இந்த சீசனில் அதிகபட்ச விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 2-வது பவுலராக திகழ்கிறார் ஜடேஜா.
ஒரு சீசனில் 500க்கும் கூடுதலான ரன்கள் 50 விக்கெட்டுகள் என்ற சாதனையை இதுவரை கபில்தேவ் (1979-80), மிட்செல் ஜான்சன் (2008-09) ஆகியோர் நிகழ்த்தியுள்ளனர். ஜடேஜா இந்த 2016-17 சீசனில் 13 டெஸ்ட்களில் 71 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 556 ரன்களை எடுத்துள்ளார். இது கபில், ஜான்சனை விட சற்றே அதிகம். பேட்டிங்கில் ஜடேஜாவின் சராசரி 42.76, பவுலிங்கில் 22.83 என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே போல் இந்தத் தொடரில் உமேஷ் யாதவ் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதே பார்டர் கவாஸ்கர் டிராபி 2011-12இல் இவர் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இவருக்கான அதிகபட்சமாக இருந்தது. மேலும் வேகப்பந்து வீச்சாளராக நடப்புத் தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவராகத் திகழ்கிறார் உமேஷ். ஹேசில்வுட் 9 விக்கெட்டுகள்.
மிகவும் குறைந்த இலக்கான 120 ரன்களை இந்தியா வெற்றிகரமாக துரத்த முடியாமல் தோல்வி தழுவியது 1997-ல் பிரிட்ஜ் டவுன் டெஸ்ட் போட்டியில், சச்சின் கேப்டனாக இருந்த போது.