

அனில் கும்ப்ளேயின் முடிவு ஒரு வெறுமையை உண்டாக்கியுள்ளது என்பதை ஒப்புக் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், கும்ப்ளே-கோலி மோதல் விவகாரமெல்லாம் எந்த ஒரு அமைப்பிலும் சாத்தியமே என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
நாம் தொழில்பூர்வ கிரிக்கெட் வீரர்கள் மாற்றங்கள் நடைபெறும் எந்த ஒரு அமைப்பிலும் இத்தகைய கருத்து மோதல்கள், நிகழ்வுகள் சாத்தியமே. இதுவரை இது குறித்த விஷயங்களில் நாங்கள் ஒருமித்த உணர்வுடன் செயல்பட்டு வருகிறோம்.
அணி வீர்ர்கள் விளையாட்டில் கவனம் செலுத்துகின்றனர். ஒருவர் அணியை விட்டுச் செல்கிறார் என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. கும்ப்ளேயின் கீழ் அணி நிறைய வெற்றிகளை பெற்றது, நிச்சயம் வெறுமை ஏற்பட்டுள்ளது, ஆனால் அணியின் அனுபவமிக்க வீரர்கள் யுவராஜ், தோனி, விராட் கோலி ஆகியோர் திரைக்குப் பின்னால் இந்நிலைமையை சீர் செய்ய நிறைய பங்களிப்பு செய்து வருகின்றனர். இளம் வீரர்களை இவர்கள் வழிநடத்துகின்றனர்.
நம்பிக்கை என்பது பயிற்சியாளருக்கும் கேப்டனுக்கும் இடையில் மட்டுமல்லாது வீரர்களுக்கும் அனைவருக்கும் இடையே இருக்க வேண்டும். இதனை எட்டிவிட்டால் பயிற்சியாளரின் பங்கு எளிதாகி விடும். இதைத்தான் நான் தற்போது கற்றுக் கொண்டு வருகிறேன்.
பாகிஸ்தானுக்கு எதிராக முதல் போட்டியில் கடைசி 8 ஓவர்களில் 108 ரன்கள் எடுத்தோம் இது யுவராஜ் இல்லாமல் சாத்தியமில்லை, அதே போல் கட்டாக் ஒருநாள் போட்டியில் யுவராஜ், தோனி (தோனி சதம் அடித்த போட்டி) ஆகியோரது அனுபவமே கைகொடுத்தது, அவர்கள் தொடர்ந்து இப்படியாக உத்வேகம் அளித்தால் அவர்கள் தொடர்ந்து ஆடுவதில் தவறில்லை. அவர்கள் இருப்பின் மூலம் நாம் பயன்களை பெற முடியும்.
இவ்வாறு கூறினார் பாங்கர்.