

7-வது தேசிய சப்-ஜுனியர் மகளிர் ஹாக்கிப் போட்டி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேலுமாணிக்கம் செயற்கை புல் ஹாக்கி மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இந்த தொடரின் பி டிவிசன் போட்டிகள் இன்று தொடங்கி வரும் 13-ம் தேதி வரையும், ஏ டிவிசன் போட்டிகள் ஜனவரி 11-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையும் நடைபெறுகிறது. இதில் ஏ டிவிசனில் 20 அணிகளும், பி டிவிசனில் 20 அணிகளும் கலந்து கொண்டு மோத உள்ளன.
ஏ டிவிசனில் நடப்பு சாம்பிய னான இந்திய விளையாட்டு ஆணை யம், பஞ்சாப், மத்திய பிரதேச ஹாக்கி அகாடமி, ஹரியாணா, சண்டிகர், உத்தரபிரதேச ஹாக்கி, தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், ஹாக்கி கங்பூர்-ஒடிசா, பீகார், ஹாக்கி மத்திய பிரதேசம், ஹாக்கி ஒடிசா, மிசோரம், பெங்கால் ஹாக்கி அசோசியேசன், ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.
பி டிவிசனில் அசாம் ஹாக்கி, சிட்டிசன் ஹாக்கி லெவன், மும்பை ஹாக்கி அசோசியேசன், மும்பை பள்ளிகள் விளையாட்டு சங்கம், ஜம்மு&காஷ்மீர், குஜராத் விளையாட்டு ஆணையம், உத்தரகண்ட், ராஜஸ்தான், குஜராத், புதுச்சேரி, போபால், கோவா, தாத்ரா & நகர் ஹவேலி ஹாக்கி சங்கம், விதர்பா, கேரளா, இமாச்சல பிரதேசம், ஹாக்கி கூர்க், ஹாக்கி மத்திய பாரத், தெலங்கானா, ஹாக்கி இமாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.
மொத்தம் 700 வீராங்கனைகள் இந்த தொடரில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். முன்னதாக போட்டியின் தொடக்க விழா நேற்று மாலை நடைபெற்றது. வீராங்கணைகளின் அணி வகுப்பை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். தமிழ் நாடு ஹாக்கி சங்கத் தலைவர் ஏ.செல்லத்துரை அப்துல்லா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஹாக்கி சங்க செயலாளர் எம்.ரேணுகா லட்சுமி, ராமநாதபுரம் மாவட்ட ஹாக்கி சங்க துணைத் தலைவர் வி.மனோகரன், செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி தாளாளர் சின்னத்துரை அப்துல்லா, மாவட்ட விளையாட்டு அலுவலர் பி.பிராங் பால் ஜெயசீலன், தமிழ்நாடு ஹாக்கி சங்கப் பொருளாளர் செந்தில் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.