

ரஞ்சி கோப்பை சாம்பியனான குஜராத் அணிக்கும், ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கும் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்றது.
இதில் குஜராத் அணி முதல் இன்னிங்ஸில் 102.5 ஓவர்களில் 358 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக காந்தி 169 ரன்கள் எடுத்தார். ரெஸ்ட் ஆப் இந்தியா அணி சார்பில் சித்தார்த் கவுல் 5, பங்கஜ் சிங் 4 விக்கெட்கள் கைப்பற்றினர்.
இதையடுத்து பேட் செய்த ரெஸ்ட் ஆப் இந்தியா முதல் இன்னிங்ஸில் 75 ஓவர்களில் 226 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் சேதேஷ்வர் புஜாரா 86 ரன்கள் எடுத்தார். குஜராத் அணி தரப்பில் கஜா 4, ஹர்திக் படேல் 3 விக்கெட்கள் கைப்பற்றினர்.
132 முன்னிலையுடன் விளையாடிய குஜராத் அணி 2-வது இன்னிங்ஸில் 90.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பன்சால் 73, காந்தி 70, கேப்டன் பார்த்தீவ் படேல் 32 ரன்கள் எடுத்தனர். ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் நதீம் 4 விக்கெட்கள் கைப்பற்றினார்.
இதையடுத்து 379 ரன்கள் இலக் குடன் பேட் செய்த ரெஸ்ட் ஆப் இந்தியா 4-வது நாள் ஆட்டத்தில் 63 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்தது. ஹெர்வாத்கர் 20, அபிநவ் முகுந்த் 19, கருண் நாயர் 7, மனோஜ் திவாரி, 7 ரன்களில் நடையை கட்டினர். 5-வது விக்கெட்டுக்கு கேப்டன் புஜாராவுடன் இணைந்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.
4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி மேற்கொண்டு விக்கெட்களை இழக்காமல் 84 ஓவர்களில் 266 ரன்கள் எடுத்தது. சாஹா 123, புஜாரா 83 ரன்களுடன் களத்தில் இருந்தனர். வெற்றிக்கு 113 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை இருவரும் தொடர்ந்து விளையாடினர்.
புஜாரா சதம் அடித்து அசத்த மறுமுறையில் அபராமாக விளையாடிய சாஹா இரட்டை சதம் அடித்தார். இவர்களது சிறப்பான ஆட்டத்தால் 103.1 ஓவரில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 379 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது ரெஸ்ட் ஆப் இந்தியா அணி.
சாஹா 272 பந்துகளில், 26 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 203 ரன்களும், புஜாரா 238 பந்து களில், 16 பவுண்டரிகளுடன் 116 ரன்களும் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகனாக சாஹா தேர்வானார்.
கடந்த 19 ஆண்டுகளில் இரானி கோப்பையை ரெஸ்ட் ஆப் இந்தியா அணி வெல்வது இது 15-வது முறையாகும். சாஹா-புஜாரா ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 78.5 ஓவர்களில் 316 ரன்கள் விளாசி சாதனை படைத்தது. இரானி கோப்பை வரலாற்றில், விக்கெட் கீப்பராக சாஹா சேர்த்த 203 ரன்கள் சாதனையாக அமைந்தது.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் தனது இடத்தை சாஹா தக்கவைத்துக்கொள்வார் என தெரிகிறது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரு போட்டிகளில் சாஹா காயம் காரணமாக இடம்பெறாமல் இருந்தார். இந்த இரு ஆட்டத்திலும் களமிறங்கிய பார்த்தீவ் படேல் பேட்டிங்கிலும் அசத்தியிருந்தார்.
மேலும் குஜராத் அணிக்கு முதன்முறையாக ரஞ்சி கோப்பை யையும் பார்த்தீவ் பெற்றுக் கொடுத்தார். இதனால் சாஹா, அணிக்கு திரும்ப கடும் போட்டி இருக்கும் என கருத்து எழுந்த நிலையில் தற்போது உள்ளூர் தொடரில் இரட்டை சதம் அடித்து தேர்வுக்குழுவினரின் பார்வையை தனது பக்கம் ஈர்த்துள்ளார்.