Published : 05 May 2017 03:16 PM
Last Updated : 05 May 2017 03:16 PM

அதிகம் யோசிக்க வேண்டாம், அடித்துக் கொண்டேயிருப்போம்: சஞ்சு சாம்சனுக்கு அறிவுறுத்திய ரிஷப் பந்த்

டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியின் 208 ரன்கள் இலக்கை 17.3 ஓவர்களில் டெல்லி அணி துரத்தி வெற்றி பெற்றது.

இந்த மகாவிரட்டலுக்கு முக்கியக் காரணம் ரிஷப் பந்த் என்ற அதிரடி இடது கை வீரரின் எதிர்பாராத தாக்குதல் ஆட்டமே. 43 பந்துகளில் 6 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 97 ரன்களை விளாசி குஜராத் பந்துவீச்சை மைதானம் முழுக்க சிதறடித்தார். இவருடன் மற்றொரு இளம் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் இணைந்து சுமார் 10 ஓவர்களில் 143 ரன்களை விளாசினர். சஞ்சு சாம்சன் 31 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்தார்.

இருவரும் இணைந்து விளாசியதில் பந்துகள் மொத்தம் 31 முறை பவுண்டரியைக் கடந்து சென்றது. இந்த அடிதடி ஆட்டத்தின் விளைவாக டெல்லி வெற்றி பெற குஜராத் லயன்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பிலிருந்து வெளியேற்றப்பட்டது. பந்த் ஆட்டத்தின் முதல் ஸ்கோரிங் ஷாட்டே கவர் திசைக்கு மேல் சிக்ஸ்.

இந்நிலையில் சங்வானைக் கொண்டு வந்தார் ரெய்னா, முதல் 3 பந்துகளில் 16 ரன்களை விளாசினார் பந்த். 5 ஓவர்களுக்கு முன்னதாக டெல்லி 50 ரன்களை எடுத்தது. ஜேம்ஸ் பாக்னர் பவர் பிளேயின் கடைசி ஓவரில் 5 ரன்கள் கொடுத்தார். அதன் பிறகு நடந்தது குஜராத்துக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல்தான்... ஏனெனில் அடுத்த 6 ஓவர்களில் 90 ரன்களை பந்த், சாம்சன் விளாசித்தள்ளினர். சாம்சன் 7 சிக்சர்களை மட்டுமே விளாசி ஜடேஜாவிடம் வீழ்ந்தார்.

ஆனால் பந்த் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, ஒரு சிக்ஸ், பவுண்டரி அடித்து பந்துக்கு ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்று மாற்றினார். டி20 கிரிக்கெட் எப்படி ஆட வேண்டுமோ அப்படி ஆடினார் பந்த். இன்னும் 3 ரன்கள் எடுத்து சதம் அடித்திருந்தால் ஐபிஎல் கிரிக்கெட்டில் சதம் கண்ட இளம் வீரர் சாதனைக்கு உரித்தானவராக இருந்திருப்பார். டெல்லி அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ரிஷப் பந்த்துடன் ஆடிய சஞ்சு சாம்சன் ஒரு சமயத்தில் 2 சிக்சர்களை அடித்து ஒரு சிங்கிள் எடுக்கலாம் என்று யோசித்துள்ளார், அப்போது பந்த் அவரிடம் ‘அதிகம் யோசிக்க வேண்டாம், அடித்துக் கொண்டேயிருப்போம்’ என்று கூறியுள்ளார்.

இது ஐபிஎல் டி20 இணையதளத்தில் சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பந்து தங்கள் பயிற்சியாளர் ராகுல் திராவிடிடம் பேசியதாவது:

“நான் இன்னிங்ஸை நன்றாகவே தொடங்கினேன். ஒரு ஓவரில் 2 சிக்சர்கள் அடித்த பிறகு பாதுகாப்பாக ஒரு சிங்கிள் எடுக்கலாம் என்று நினைத்தேன். அப்போதுதா பந்த் என் அருகே வந்து ‘பிரதர் அதிகம் யோசிக்க வேண்டாம், அடித்துக் கொண்டேயிரு’ என்றார். அதுதான் எனக்கு உத்வேகத்தை அளித்தது. ரிஷப் உடன் பேட் செய்வது மகிழ்ச்சியாக அமைந்தது” என்றார்.

ரிஷப் பந்த் கூறும்போது, ‘பந்தைப் பார்ப்பேன், அடிக்கக் கூடியது என்று முடிவெடுத்தால் அடித்து விடுவேன். நான் அவுட் ஆகிவிடுவேன் என்றெல்லாம் யோசிக்கவேயில்லை. மோசமான பந்தா அதை அடித்து நொறுக்க வேண்டும். அதைத்தான் நான் செய்தேன்” என்றார்.

ராகுல் திராவிட் உடனே, எந்த பவுலரை குறி வைத்தீர்கள் என்று கேட்டார் அதற்கு ரிஷப் பந்த், “நாங்கள் அடுத்த பந்தைப் பற்றியே யோசிக்கவில்லை. நான் உங்களிடம் ஏற்கெனவே கூறியது போல் மோசமான பந்தை அடித்து நொறுக்க வேண்டும். அதைத்தான் சஞ்சுவிடமும் கூறினேன், தொடர்ந்து அடித்துக் கொண்டேயிருக்க வேண்டும் அவ்வளவே.

இலக்கை முடிக்க வேண்டுமென்றுதான் தோன்றியதே தவிர சதம் என் சிந்தனையில் இல்லை.

ராகுல் திராவிட் கூறும்போது, “ரிஷப் இடம் எனக்கு பிடித்தது என்னவெனில் 97 ரன்களில் இருக்கிறார், சதம் பற்றி யோசிக்கவேயில்லை. ஷாட் ஆடவே சென்றார். இருவரும் அபாரமான இன்னிங்ஸை ஆடினர். உண்மையில் நிறைய பாராட்டுகளுக்கு தகுதியுடைய இன்னிங்ஸ் ஆகும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x