ஐசிசி ஆல்ரவுண்டர் தரவரிசையில் அஸ்வின் முதலிடம்

ஐசிசி ஆல்ரவுண்டர் தரவரிசையில் அஸ்வின் முதலிடம்

Published on

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் தரவரிசையில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் அஸ்வின் முதலிடத்தைப் பிடித்தார். கொல்கத்தாவில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்ததோடு, 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 3-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் அஸ்வின். இதனால் வங்கதேச வீரர் ஷகிப் அல்ஹசன் 2-வது இடத்துக்கும், தென் ஆப்பிரிக்க வீரர் ஜாக்ஸ் காலிஸ் 3-வது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளனர். டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 18 இடங்கள் முன்னேறி 45-வது இடத்தையும், பௌலர்கள் தரவரிசையில் இரு இடங்கள் முன்னேறி 6-வது இடத்தையும் பிடித்துள்ளார் அஸ்வின். அறிமுகப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, முகமது சமி ஆகியோரும் டெஸ்ட் தரவரிசையில் இடம்பிடித்துள்ளனர். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 177 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா, பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 63-வது இடத்தைப் பிடித்தார். முகமது சமி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் பௌலர்கள் தரவரிசையில் 53-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய பௌலர் புவனேஸ்வர் குமார் 13 இடங்கள் முன்னேறி 83-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக 6 விக்கெட்டுகளை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள் பௌலர் ஷில்லிங்ஃபோர்டு 4 இடங்கள் முன்னேறி, தரவரிசையில் முதல்முறையாக 20 இடங்களுக்குள் வந்துள்ளார். அவர் தற்போது 17-வது இடத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஏ.பி.டிவில்லியர்ஸ், டேல் ஸ்டெயின் ஆகியோர் முறையே பேட்ஸ்மேன்கள் மற்றும் பௌலர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in