

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மட்டுமே இடம் பெற்றுள்ளார். இந்த பட்டியலின் முதலிடத்தில் கால்பந்தாட்ட வீரர் க்ரிஸ்டியானோ ரொனால்டோ இருக்கிறார்.
ஃபோர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு வருடமும் உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் முதல் 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 89-வது இடத்தில் இருக்கிறார். 3 மில்லியன் டாலர்களை (ரூ.19 கோடிக்கு அதிகமாக) தனது ஆட்டத்தின் மூலமும், 19 மில்லியன் டாலர்களை (ரூ.100 கோடிக்கு அதிகமாக) விளம்பரத்தின் மூலமும் கோலி வருமானமாகப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட்டில் ஒரு முக்கிய நபராக கோலியை குறிப்பிட்டுள்ள ஃபோர்ப்ஸ், அவர் இப்போதே புகழ்பெற்ற சச்சின் டெண்டுல்கருக்கு இணையாக பேசப்படுகிறார் என்று கூறியுள்ளது.
ஃபோர்ப்ஸ் அறிக்கையின் படி கடந்த வருடம் கோலி 1 மில்லியன் டாலர்களை சம்பளமாக பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக சம்பளம் வாங்கும் வீரர்களில் ஒருவராகவும் அவர் இருக்கிறார். பெங்களூரு அணிக்காக அவர் 2.3 மில்லியன் டாலர்களை சம்பளமாக பெற்றுள்ளோர். ஆனால் அவரது பெரும்பான்மையான வருமானம் விளம்பரங்களின் மூலமே வருகிறது.
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ரொனால்டோ கடந்த வருடம் 93 மில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளார். மேலும் இந்த பட்டியலில் அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் லெப்ரான் ஜேம்ஸ் (86.2 மில்லியன் டாலர்கள்), அர்ஜெண்டினா கால்பந்தாட்ட வீரர் லயனல் மெஸ்ஸி (80 மில்லியன் டாலர்கள்), டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் (64 மில்லியன் டாலர்கள்) உள்ளிட்டோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே வீராங்கனை அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் மட்டுமே. 51வது இடம் பெற்றுள்ள அவர் 27 மில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளார்.
இந்த பட்டியலுக்கு 21 நாடுகளைச் சேர்ந்த 100 விளையாட்டு வீரர்கள் பரிசீலிக்கப்பட்டாலும் அமெரிக்க விளையாட்டு வீரர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதிக சம்பளம் தரும் அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்து சங்கம் (என்பிஏ), தேசிய கால்பந்து லீக், மேஜர் லீக் பேஸ்பால் ஆகிய தொடர்களால் 63 அமெரிக்க வீரர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.