

சிங்கப்பூர் பாட்மிண்டனில் ஸ்பெயினின் கரோலினா மரினிடம் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார்.
சிங்கப்பூர் பாட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 5-ம் நிலை வீராங்கனையான சிந்து 11-21, 15-21 என்ற நேர் செட்டில் 4-ம் நிலை வீராங்கனையான கரோலின் மரினிடம் வீழ்ந்தார். 35 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவடைந்தது. எந்த ஒரு கட்டத்திலும் சிந்துவை, மரின் நிமிர செய்யவிட வில்லை.
இதன் மூலம் கடந்த சிலவாரங்களுக்கு முன்பு இந்தியன் ஓபன் பாட்மிண்டன் தொடரின் இறுதி ஆட்டத்தில் சிந்துவிடம் அடைந்த தோல்விக்கு மரின் பழிதீர்த்துக்கொண்டார்.
ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் சாய் பிரணீத் 15-21, 21-14, 21-19 என்ற செட் கணக்கில் ஒரு மணி நேரம் 11 நிமிடங்கள் போராடி தாய்லாந்தின் தனோங்சக்கை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். அரை இறுதியில் சாய் பிரணீத், கொரியாவின் லீ டாங்குடன் மோதுகிறார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமித் ரெட்டி, அஸ்வினி பொன்னப்பா ஜோடி 11-21, 8-21 என்ற நேர் செட்டில் சீனாவின் லு ஹைய், ஹூவாங் ஜோடியிடம் தோல்வியடைந்தது.