Published : 30 Oct 2014 07:37 PM
Last Updated : 30 Oct 2014 07:37 PM

தொடர்ந்து 3-வது சதம் எடுத்து யூனிஸ் கான் சாதனை: வலுவான நிலையில் பாகிஸ்தான்

அபுதாபியில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் பாகிஸ்தான் முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

ஆட்ட முடிவில் யூனிஸ் கான் 111 ரன்களுடனும் அசார் அலி 101 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

முதல் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சாதனை நிகழ்த்திய யூனிஸ் கான் இன்று சதம் கண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 தொடர் சதங்களை எடுத்த 2வது பேட்ஸ்மென் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். யூனிஸ் கானின் 27வது டெஸ்ட் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

1924-25 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து வீரர் ஹெர்பர்ட் சட்கிளிஃப் தொடர்ந்து 3 சதங்கள் எடுத்ததற்குப் பிறகு தற்போது யூனிஸ் கான் இந்த அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியில் மைக்கேல் கிளார்க் இரண்டு அசாதாரண தேர்வு செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். அலெக்ஸ் டூலனை உட்கார வைத்து விட்டு 3ஆம் நிலையில் களமிறங்க அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல்லை தேர்வு செய்துள்ளார். அதே போல் ஓ’கீஃப் என்ற ஸ்பின்னரை விடுத்து மிட்செல் ஸ்டார்க்கை தேர்வு செய்துள்ளார்.

இன்று 8 பவுலர்களை கிளார்க் முயற்சி செய்தார். ஆனாலும் ஒன்றும் பயனளிக்கவில்லை. ஒரு சமயத்தில் கிரிக்கெட்டில் இதுவரை காணாத பீல்ட் செட்-அப் செய்ததும் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அதனை பிறகு தனியே பார்ப்போம்.

பாகிஸ்தானுக்காக மொகமது ஹபீஸ், அகமது ஷேஜாத் நன்றாகத் தொடங்கினர். இருவரும் 57 ரன்களைச் சேர்த்தனர். அப்போது அகமது ஷேஜாத் 35 ரன்களில் லயன் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார். உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் 82/1 என்று இருந்தது.

உணவு இடைவேளை முடிந்த பிறகு ஸ்கோர் 96 ரன்களை எட்டிய போது 45 ரன்கள் எடுத்த ஹபீஸ், ஜான்சன் பந்தில் ஹேடினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த 2 விக்கெட்டுகளோடு சரி. தேநீர் இடைவேளையின் போது அசார் அலி 26 ரன்களுடனும் யூனிஸ் கான் 49 ரன்களுடனும் இருக்க ஸ்கோர் 158 ரன்களை எட்டியது.

அதாவது 52 ஓவர்கள் முடிந்த நிலையில் 158/2. ஆனால் அதன் பிறகு வீசப்பட்ட 36 ஓவர்களில் யூனிஸ் கான், அசார் அலி சற்றே ஆக்ரோஷம் காட்டி அபாரமாக ஆடி 146 ரன்களை சேர்த்தனர். 139 பந்துகளில் 50 ரன்களை எட்டிய அசார் அலி, அடுத்த 51 ரன்களை 64 பந்துகளில் எடுத்தார்.

அதே போல் 74 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த யூனிஸ் கான் அடுத்த 54 பந்துகளில் சதம் கண்டார். யூனிஸ் கானின் இந்த சாதனை சதத்தில் 10 பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடித்தார். அசார் அலி 6 பவுண்டரிகளை மட்டும் அடித்தார்.

மொத்தத்தில் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பந்து வீச்சை பிளந்தனர் யூனிஸ் கானும், அசார் அலியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x