Published : 27 Oct 2013 11:36 PM
Last Updated : 27 Oct 2013 11:36 PM

டிவென்டி 20 உலகக் கோப்பை: முதல் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது இந்தியா

டிவென்டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இப்போட்டி 2014 மார்ச் 21-ல் நடைபெறவுள்ளது. சூப்பர் 10 சுற்றின் முதல் ஆட்டமும் இதுதான்.



வங்கதேசத்தில் 2014 மார்ச் 16 முதல் ஏப்ரல் 16 வரை டிவென்டி 20 உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது

இப்போட்டிக்கான அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டது. மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டும் இப்போட்டியுடன் சேர்ந்து நடைபெறவுள்ளது.

கடந்த காலத்தில் நடைபெற்றது போலவே மகளிர் போட்டியின் அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் ஆண்கள் போட்டி நடைபெறும் நாளில், அதே இடத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டில் 12 அணிகள் இந்த உலகக் கோப்பை போட்டியில் களமிறங்கின. இந்த ஆண்டு 16 அணிகள் போட்டியிட உள்ளன. தகுதிச் சுற்று, சூப்பர் 10 என இரு பிரிவுகளாக போட்டி நடைபெறும். 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள (இந்தியா உள்பட) 8 அணிகள் நேரடியாக சூப்பர் 10-க்கு வந்து விடும். மேலும் இரு அணிகள் தகுதித் சுற்று மூலம் சூப்பர் 10-க்குள் வரும்.

வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் தகுதிச் சுற்றில் விளையாடவுள்ளன. இவை தவிர மேலும் 6 நாட்டு அணிகள் தகுதிச் சுற்றில் பங்கேற்கும். அந்த அணிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தகுதிச் சுற்றில் விளையாடும் 8 அணிகளும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டி நடைபெறும்.

நடப்புச் சாம்பியனான மேற்கிந்தியத்தீவுகள் மார்ச் 23-ம் தேதி தனது முதல் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது.

சூப்பர் 10 இரு பிரிவுகள் உள்ளன. அவை - குரூப் 1: இலங்கை, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஏ பிரிவு தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி.

குரூப் 2: இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, பி பிரிவு தகுதிச் சுற்றில் வெல்லும் அணி.

இப்போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை 30 லட்சம் டாலர் (சுமார் 18.5 கோடி) முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.7 கோடியும், இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.4 கோடியும் பரிசாக வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x