Published : 02 Jan 2017 10:15 AM
Last Updated : 02 Jan 2017 10:15 AM

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி: தென் கொரிய வீரர் ஹியோனுடன் போர்னா கோரிச் இன்று மோதல்- யூகி பாம்ப்ரி பிரதான சுற்றுக்கு முன்னேற்றம்

தமிழக அரசின் ஆதரவுடன் 21-வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. தெற்காசியாவின் ஒரே ஏடிபி தொடரான இந்த போட்டி வரும் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் போட்டி தரவரிசையின் முதல் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச், 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ராபர்ட்டோ அகுட், 3-ம் நிலை வீரரான ஆல்பர்ட் ரமோஸ், 4-ம் நிலை வீரரான ஸ்லோவேகியாவின் மார்ட்டின் கிளிஸான் ஆகியோர் நேரடியாக 2-வது சுற்றில் களமிறங்குகின்றனர்.

சென்னை ஓபன் போட்டியில் நடப்பு சாம்பியனும் 4 முறை பட்டம் வென்றவருமான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா இந்த முறை கலந்து கொள்ளவில்லை. இதனால் இம்முறை பட்டம் வெல்லக்கூடிய வர்களின் பட்டியலில் குரோஷியா வின் மரின் சிலிச் முதலிடத்தில் உள்ளவராக கருதப்படுகிறார்.

இவர்களுடன் 48-வது இடத்தில் உள்ள குரோஷியாவின் போர்னா கோரிச், 57-ம் நிலை வீரரான ரஷ்யா வின் மிகைல் யூஸ்னி ஆகியோரும் கலக்க காத்திருக்கிறார்கள்.

இவர்களில் 20 வயதான போர்னா கோரிக், கடந்த ஆண்டு சென்னை ஓபனில் இறுதி போட்டி வரை முன்னேறியிருந்தார். இவர் தனது முதல் சுற்றில் தகுதி சுற்றில் வெற்றி பெற்ற தென் கொரியாவின் ஹியோன் சுங்குடன் மோதுகிறார். ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திரங்காக சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஆகியோருடன் தகுதி சுற்றில் வெற்றி பெற்ற யூகி பாம்ப்ரியும் களமிறங்குகிறார்.

யூகி பாம்ப்ரி தகுதி சுற்றின் 2-வது ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் நிக்கோலஸ் ஹிக்கெரை 6-3, 6-1 என்ற நேர் செட்டில் வீழ்த்தி பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.

தரவரிசையில் 192-வது இடத்தில் இருக்கும் மைனேனி தனது முதல் சுற்றில் 57-வது இடத்தில் இருக்கும் ரஷ்யாவின் மிகைல் யூஸ்னியை சந்திக்கிறார். இந்தியாவின் மற்றொரு முன்னணி வீரரான ராம்குமார் ராமநாதன் தனது முதல் சுற்றில் தகுதி சுற்றில் வெற்ற சகநாட்டை சேர்ந்த யூகி பாம்ப்ரியுடன் மோதுகிறார்.

இரட்டையர் பிரிவில் இந்தியா வின் சாகேத் மைனேனி - ராம் குமார், ராம் பாலாஜி -விஷ்ணு வர்தன், ரோஹன் போபண்ணா - ஜீவன் நெடுஞ்செழியன், பூரவ் ராஜா - திவிஜ் சரண் ஜோடிகள் களமிறங்குகின்றன.

இவர்களை தவிர 7 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவரும், 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென் றவருமான லியாண்டர் பயஸ், பிரேசிலின் ஆண்ட்ரே சாவுடன் இணைந்து களமிறங்குகிறார்.

இன்றைய ஆட்டங்கள்

ஒற்றையர் பிரிவில் இன்று நடை பெறும் ஆட்டங்களில் தியாகோ மான்டீரோ (பிரேசில்) - டேனில் மெத்வதேவ் (ரஷ்யா), டூடி செலா (இஸ்ரேல்) - டமிர் தும்ஹுர் (போஸ் னியா & ஹெர்ஸிகோவினா), ஸ்டீவ் டார்சிஸ் (பெல்ஜியம்) - நிக்கோலா மேக்டிக், போர்னா கோரிச் (குரேஷியா) - ஹியோன் சுங் (தென் கொரியா), கேஸ்டோ எலியாஸ் (போர்ச்சுகல்) - கோவிலக் (சுலோவேகியா) ஆகியோர் மோதுகின்றனர்.

இரட்டையர் பிரிவில் நடை பெறும் ஆட்டங்களில் ஆந்த்ரே பெஜ்மான் (ஜெர்மனி), யன் சன் லு (தைபே) - மெல்சர் (ஆஸ்திரியா), ரென்சோ (அர்ஜென்டினா) ஜோடி களும், இந்தியாவின் ராம் பாலாஜி, விஷ்ணுவர்தன் ஜோடி ஸ்வீடனின் ஜோகன் புரூன்ஸ் டிரோம், ஆன்ட்ரியாஸ் ஷில்ஜெஸ் டிரோம் ஜோடியுடனும் பலப் பரீட்சை நடத்துகின்றன.

நேரம்: மாலை 5

நேரடி ஒளிபரப்பு: சோனி சானல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x