Published : 04 Jan 2014 07:12 PM
Last Updated : 04 Jan 2014 07:12 PM

ஐபிஎல்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மீண்டும் காம்பிர், நரைன்

வரும் ஐபிஎல் தொடருக்கு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, காம்பிர் மற்றும் சுனில் நரைன் ஆகிய இருவரையும் தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. அந்த அணிக்கு மீண்டும் கௌதம் காம்பிர் தலைமையேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் மூன்று ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக ஆடிய காம்பிர், நடிகர் ஷாருக்கானின் கொல்கத்தா அணியில் 2011 ஆண்டு முதல் ஆடிவருகிறார். காம்பிர் தலைமையில் தான், 2012-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை, அந்த அணி வென்றது. 2013-ஆம் வருடத் தொடர் கொல்கத்தா அணிக்கு மோசமானதாக அமைந்தாலும், காம்பிரை தக்க வைக்க அணியின் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். காம்பிர் இதுவரை 88 ஐபிஎல் போட்டிகளில் 2471 ரன்கள் எடுத்துள்ளார்.

அதே போல, ஐபிஎல் வீரர்களுக்கு மத்தியில், இன்றளவும் சிறந்த சுழற்பந்து வீச்சாளராகவு, பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக திகழும் மேற்கிந்திய தீவுகளின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைனும் கொல்கத்தா அணியில் மீண்டும் இடம் பெறுகிறார்.

இது பற்றி ஐபிஎல் நிர்வாகி ஒருவர் பேசுகையில், "ஆம், வரும் ஐபிஎல் தொடருக்கு காம்பிர் மீண்டும் அணியில் இடம் பெறுவார். அவர் கொல்கத்தா அணியை சிறப்பான முறையில் வழிநடத்தி வந்துள்ளார். அவரை கேப்டன் ஆக்குவது ஐபிஎல் போடிகளில் அவர் தொடர்ந்து செயல்பட உதவிகரமாய் இருக்கும். கொல்கத்தா அணியின் ரசிகர்கள், காம்பிரையும், அணியையும் ஒன்றாகவே பார்க்கின்றனர். சுனில் நரைனை பொருத்தவரை, எங்கள் அணிக்கு அவர் சாம்பியனாக இருந்து வருகிறார். அவரது விக்கெட் எடுக்கும் திறமை மற்றும் அவரது சராசரியே போதும் அவரைப் பற்றி பேச" என்றார்.

2014-ஆம் ஆண்டு ஐபிஎல் அணி வீரர்களுக்கான ஏலம், பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x