Published : 28 Aug 2016 11:07 AM
Last Updated : 28 Aug 2016 11:07 AM

40 ஓவர்களில் 489 ரன்கள்: பரபரப்பு போட்டியில் 1 ரன்னில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்த இந்தியா

அமெரிக்காவில் நடைபெற்ற இந்திய-மே.இ.தீவுகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் ரன் மழை பொழிய கடைசியில் மே.இ.தீவுகள் 1 ரன்னில் இந்திய அணியை வீழ்த்தியது.

டாஸ் வென்ற தோனி முதலில் மே.இ.தீவுகளை பேட் செய்ய அழைக்க பிளே என்று நடுவர் கூறத் தொடங்கியவுடனேயே ரன் மழையில் மைதானம் நனைய அந்த அணி 20 ஓவர்களில் 245 ரன்கள் என்று புதிய மே.இ.தீவுகள் டி20 சாதனை ரன் எண்ணிக்கையை எட்டியது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி அதிகபட்ச ரன் இலக்கிற்கான வெற்றிகரமான துரத்தல் சாதனையை நிகழ்த்த வேண்டிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து 1 ரன்னில் துரதிர்ஷ்டவசமாக தோல்வி அடைந்தது.

அமெரிக்காவிற்கு டி20 கிரிக்கெட்டை ‘மார்க்கெட்’ செய்வதற்கான இந்தத் தொடரின் முதல் போட்டி காட்சிப் போட்டிக்குரிய அனைத்து தன்மைகளுடன் பவுலர்கள் கோமாளிகளாக பேட்ஸ்மென்கள் ஹீரோக்களாக மட்டை பிட்சில், குறைந்த தூர பவுண்டரி உதவியுடன் பந்துகள் நாலாபுறமும் சிதறடிக்கப்பட்டன. 20 ஒவர்களில் 489 ரன்கள் என்ற புதிய டி20 சாதனை நிகழ்த்தப்பட்டது. ஆனால் இதுதாண்டா அதிரடி என்றவாறு இரு அணிகளுமே விளாசித்தள்ளின.

கடைசியில் இந்தியாவுக்கு 12 பந்துகளில் 24 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது. ரஸல் பந்தை தேர்ட்மேனில் அபாரமாக சிக்ஸ் அடித்து 46 பந்துகளில் சதம் எடுத்து சாதனை நிகழ்த்தினார் ராகுல். அடுத்த பந்தே அருமையாக இன்சைட் அவுட் சென்று எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரி அடித்தார். 19-வது ஓவரில் 16 ரன்கள் வர கடைசி ஓவரில் வெற்றிக்குக் 8 ரன்களே தேவை.

கடைசி ஓவரை அனுபவமிக்க பிராவோ வீச முதல் பந்தில் தோனி சுழற்ற மர்லன் சாமுவேல்ஸ் மிக மிக எளிதான கேட்சைக் கோட்டைவிட்டார். ஆனால் தோனி 1 ரன் எடுத்து ஸ்ட்ரைக் ராகுல் பக்கம் வந்தது. அடுத்த 3 பந்துகளிலும் சிங்கிள் சிங்கிளாக 3 ரன்களே வந்தது.

அடுத்த பந்து ஆஃப் ஸ்டம்ப் யார்க்கரை தோனி நேராக அடிக்க பிராவோ கையில் பட்டு திசைமாறிச் செல்ல தோனி 2 ரன்களை ஓடினார். ஸ்கோர் 244 ஒரு பந்து வெற்றிக்கு 2 ரன்கள் டை-யிற்கு 1 ரன், ஆனால் பிராவோ வீசிய ஸ்லோயர் பந்தை தோனி ஷார்ட் தேர்ட் மேனில் ஸ்லைஸ் செய்தார் கேட்ச் ஆனது. முதல் பந்தில் கேட்ச் விட்ட அதே சாமுவேல்ஸ் இம்முறை பிடித்தார். தோனிக்கு பந்து சற்றே பிட்சில் கிரிப் ஆகி வந்தது, இதனால் பவுன்ஸ் கொஞ்சம் அதிகமாக இருந்தது. இதனால் எட்ஜ் ஆகி கேட்ச் ஆனது. அருமையான ஓவர், பிராவோ தனது அனுபவத்தை தனது சென்னை கேப்டன் தோனிக்கே காட்டினார்.

51 பந்துகளில் 12 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் ராகுல் 110 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஒருவேளை இவரிடம் ஸ்ட்ரைக் இருந்திருந்தால் இந்தியா வென்றிருக்கலாம்.

மே.இ.தீவுகளின் லூயிஸ் அதிரடி சதம், சாதனைத் தொடக்கம்:

மே.இ.தீவுகளில் சார்லஸ், லூயிஸ் இறங்கினர். ஷமி, பும்ரா, புவனேஷ் யாரும் எடுபடவில்லை முதல் 4 ஓவர்களிலேயே 63 ரன்கள் விளாசல் பிறகு முதல் விக்கெட்டுக்காக 9.3 ஓவர்களில் 126 ரன்கள். சார்லஸ் என்ற இரும்பு வீரர் 6 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 33 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து அப்போது மொகமது ஷமி பந்தில் பவுல்டு ஆனார்.

ஆந்த்ரே ரசல் களமிறங்க ரன் மழைக்கு ஓய்வில்லை ஒழிச்சலில்லை. அடுத்த 6 ஓவர்களில் 78 ரன்கள் விளாசல். ரசல் 12 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 22 ரன்கள் எடுத்தார். ஆனால் லூயிஸ் சாத்துமுறை மட்டை பின்னியை ஒன்றுமில்லாமல் செய்தது.

ஒரே ஓவரில் ஸ்டூவர்ட் பின்னி 32 ரன்களை வாரி வழங்கினார்:

11-வது ஓவரை தோனி, ஸ்டூவர்ட் பின்னியிடம் அளித்தார், எந்த விதத்திலும் டாப் அணிகளுக்கு எதிராக வலையில் கூட வீச திறனற்ற பின்னியை லூயிஸ் நேற்று அம்பலப்படுத்தினார். சுமார் ஒருமாதம் கழித்து பந்தைப் பார்க்கும் பின்னியின் முதல் பந்து டீப் மிட்விக்கெட்டில் காணாமல் போனது. அடுத்த பந்து சைட் ஸ்க்ரீனுக்கு மேலே காணாமல் போனது. உடனே பயந்து போய் ரவுண்ட் த விக்கெட்டில் வந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வைடு வீசினார் பின்னி. அடுத்த பந்து லாங் ஆஃபில் சிக்ஸ். அடுத்த பந்து ஷார்ட் அண்ட் வைடு கவரில் சிக்ஸ். அடுத்த பெரிய ஷோயப் அக்தர் ஸ்பீடு உள்ளது போல் மீண்டும் ஒரு ஷார்ட் பிட்ச் டீப் ஃபைன் லெக்கில் கார்பார்க்கில் போய் விழுந்தது. ஒரே ஓவரில் 5 சிக்சர்களுடன் 32 ரன்கள். பின்னியின் கிரிக்கெட் வாழ்வு நியாயமாக இத்துடன் முடிவுக்கு வர வேண்டும்.

ரிச்சர்ட் லெவி அடித்த 45 பந்து சத சாதனையை முறியடித்து விடுவார் லூயிஸ் என்றே நினைத்தோம், ஆனால் 49 பந்துகளில் அவர் 5 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 100 ரன்கள் எடுத்து ஜடேஜாவிடம் வீழ்ந்தார். ரசல், பொலார்ட், பிராத்வெய்ட் ஆகியோர் தங்கள் பங்குக்கு சிக்சர் அடிக்க மே.இ.தீவுகள் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது, இந்திய அணியில் அஸ்வின் மட்டுமே 4 ஓவர்களில் 36 ரன்கள் எடுத்து சிக்கனம் காட்டினார். ஜடேஜா, பும்ரா தலா 2 விக்கெட்டுகள் சிக்சர்கள் கொடுக்காத பவுலர்களே இல்லை. அஸ்வின் பவுண்டரி கொடுக்கவில்லை 4-ம் சிக்சர்கள்தான்.

கே.எல்.ராகுலின் அதிரடி சதமும், மகா விரட்டலும்:

ரோஹித் சர்மா, ரஹானேயுடன் இந்தியா 3 ஒவர்களில் 31 ரன்கள் என்ற அதிரடித் தொடக்கம் கண்டது. இதில் ரோஹித் சர்மா அபாயகரமாகத் திகழ்ந்தார். ரஹானே 7 ரன்களில் ரஸலிடம் ஆட்டமிழந்தார், பவுண்டரியில் டிவைன் பிராவோவைத் தவிர இத்தகைய அதிர்ச்சியான கேட்சை பொலார்ட் மட்டுமே பிடிக்கமுடியும். பயங்கரமான கேட்ச். ரஹானே தன் கண்களையே நம்ப முடியாமல் வெளியேறினார். ரோஹித் சர்மா 4 பவுண்டரிகள் 4 அபாரமான சிக்சர்களுடன் 28 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். இதில் 22 பந்துகளில் அரைசதம் கடந்தார் ரோஹித் சர்மா. மிக முக்கியமாக விராட் கோலி (16) விக்கெட்டை டிவைன் பிராவோ கைப்பற்றினார்.

அதாவது ரஹானேவுக்கு அற்புத கேட்சைப் பிடித்த பிராவோ, கோலிக்கு ஒரு வைட் ஆஃப் த கிரீசிலிருந்து ஒரு பந்தை ஷார்ட் பிட்சாக எழுப்ப, கோலி புல் ஷாட் ஆட முனைந்தார் ஆனால் பந்து எதிர்பார்த்ததை விட எழும்ப கிளவ்வில் பட்டு விக்கெட் கீப்பர் பிளெட்சரின் அருமையான லெக் திசை கேட்ச் ஆனது.

அதன் பிறகு ராகுல் புகுந்தார் நரைனை 2 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 16 ரன்களை 6-வது ஓவரில் விளாச பவர் பிளேயில் இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்தது. பிறகு ரோஹித் சர்மா நரைனை அடுத்தடுத்து லாங் ஆன், டீப் மிட்விக்கெட்டில் சிக்ஸ் அடித்தார். அப்போதுதான் ராகுல் 36 ரன்களில் இருந்த போது பிராத்வெய்ட் பந்தில் ரஸல் லாங் ஆஃபில் கேட்சை விட்டார், அது மேட்சையே விட்டதற்குச் சமானமாகியிருக்கும், கடைசியில் பிராவோ அந்த ஓவரை வீசியிருக்காவிட்டால். 12-வது ஓவரில் ரோஹித் சர்மா பொலார்ட் பந்தை லாங் பவுண்டரி உள்ள மிட்விக்கெட்டில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

தோனி வந்திறங்கியவுடன் பவுண்டரி அடித்து தனது வழக்கமான பாணியில் இடைவெளியில் தட்டி விட்டு இரண்டிரண்டு ரன்களாக ஓடினார். 13 ஓவர்களில் 150/3 என்ற நிலையில் 7 ஓவர்களில் 95 ரன்கள் என்பது இமாலய இலக்காகவே தெரிந்தது.

ஆனால் ராகுலின் 46 பந்துகள் சதமும் தோனியின் 25 பந்து 43 ரன்களும் இலக்கிற்கு வெகு அருகே இட்டுச் சென்றது, ஆனால் பிராவோவின் அந்த கடைசி ஓவர் அபாரம், ஆனாலும் தோனி ஒரு ரன்னிற்கு முயற்சி செய்திருக்கலாம். இதனால் ராகுலின் அற்புதமான இன்னிங்ஸ் வீணானது. வெற்றி பெற்றது மேஇ தீவுகள். ஆட்ட நாயகனாக நியாயமாக பிராவோ தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனால் சத நாயகன் லூயிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x