Published : 21 Feb 2017 10:39 AM
Last Updated : 21 Feb 2017 10:39 AM

ஐபிஎல் தொடரில் ரூ.3 கோடிக்கு ஏலம்: வியக்க வைத்த தமிழக வீரர் நடராஜன்

டிஎன்பிஎல் தொடரில் வேகப் பந்து வீச்சாளராக அசத்தியவர்

ஐபிஎல் தொடரின் 10-வது சீசனுக்கான ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த இடது கைவேகப்பந்து வீச்சளாரான தங்கராசு நடராஜனை ரூ.3 கோடிக்கு கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது. 25 வயதான நடராஜனின் அடிப்படை ஏலத்தொகை ரூ.10 லட்சமாக இருந்தது. இந்நிலையில் இந்த தொகையில் இருந்து 30 மடங்கு உயர்வாக, அவரை ஏலத்தில் எடுத்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார் பஞ்சாப் அணியின் புதிய பயிற்சியாளர் சேவக்.



நடராஜன், தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டம் சின்னபாம்பட்டியை சேர்ந்தவர். இந்த சிறிய கிராமம் சேலத்தில் இருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இவரது தந்தை ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் தினக்கூலியாக பணிபுரிந்து வருகிறார்.



தாய் சாலையோரம் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த தம்பதியரின் 5 குழந்தைகளில் மூத்த மகனான நடராஜன், ஆரம்ப காலத்தில் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி வந்துள்ளார்.



எனினும் பள்ளி சார்பிலோ, கல்லூரி சார்பிலோ எந்தவித போட்டிகளில் பங்கேற்றதில்லை. முறைப்படியான கிரிக்கெட் மைதானங்களை கூட அவர் கண்ணில் காணாமலேயே இருந்தார்.



கிரிக்கெட் வாழ்க்கைக்கு சரியான திசையை நோக்கிய பயணம் இல்லாத நிலையில் தான் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். 20 வயதில் அவருக்கு முதன்முறையாக தமிழக கிரிக்கெட் சங்கம் நடத்தும் 4-வது டிவிஷன் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடரில் 2010-11ல் பிஎஸ்என்எல் அணிக்காக விளையாடினார்.



இதன் பின்னர் அடுத்த இருவருடங்களில் முதல் டிவிஷனில் விளையாடினார். இதை தொடர்ந்து சென்னையில் புகழ் பெற்ற ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப்பில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். இந்த கிளப்புக்காக அஸ்வின், முரளி விஜய் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பலர் தங்களது இளமை காலங்களில் விளையாடி உள்ளனர்.



நடராஜனின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக கடந்த ஆண்டு தமிழக கிரிக்கெட் சங்கம் நடத்திய டிஎன்பிஎல் டி20 தொடரில் விளையாட தேர்வானார். திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக விளையாடிய அவர் தனது நேர்த்தியான மற்றும் யார்க்கர் பந்துகளால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.



திண்டுக்கல் அணிக்காக 5 ஆட்டத்தில் பங்கேற்ற இவர் 10 விக்கெட்களை கைப்பற்றினார். வங்கதேச அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான முஸ்டாபிஜூர் ரஹ்மான் போன்று இவரது பந்து வீச்சு இருக்கும். மேலும் இந்தியாவின் பும்ரா போன்று கடைசி கட்டங்களில் யார்க்கர்கள் வீசும் திறனும் நடராஜன் வசம் உள்ளது.



டிஎன்பிஎல் தொடரிலும், சென்னை கிளப் அணிகள் மட்டத்தில் தொடர்ச்சியாக இரு ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டதாலும் நடராஜனுக்கு ரஞ்சி கோப்பையில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது. கடந்த சீசன் ரஞ்சி கோப்பையில் தமிழக அணி அரை இறுதி வரை முன்னேறியதில் நடராஜனும் முக்கிய பங்கு வகித்தார்.

இவர் 9 ஆட்டங்களில் 27 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியிருந்தார். சமீபத்தில் நடைபெற்ற முஸ்டாக் அலி டி20 தொடரிலும் நடராஜன் தமிழக அணி சார்பில் கலந்து கொண்டார். முதல் இரு ஆட்டத்தில் மட்டும் விளையாடிய இவர் 4 விக்கெட்களையும் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாறுபட்ட கோணங்களில் பந்து வீசுவது, யார்க்கர் பந்துகளை சரளமாக கையாள்வது உள்ளிட்ட திறன்களால் நடராஜனை கிரிக்கெட் வட்டாரங்களில் தமிழகத்தின் முஸ்டாபிஜூர் ரஹ்மான் என செல்லப் பெயர் வைத்தே அழைக்கின்றனர். ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ள அவர் கூறியதாவது:

இது உண்மையான என என்னால் நம்ப முடியவில்லை. டிஎன்பிஎல் தொடரில் விளையாடுவேன் ஒருபோதும் நான் நினைத்ததில்லை. அதுபோன்று தான் தற்போது ஐபிஎல் தொடரும் அமைந்துள்ளது. இவை நிகழ்ந்ததற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

டிஎன்பிஎல் தொடரில் நான் தேர்வு செய்யப்படுவதற்கு அதிக அழுத்தம் இருந்தது. அஸ்வின், முரளி விஜய் மற்றும் தமிழக அணி பந்து வீச்சாளர் எல்.பாலாஜி ஆகியோருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ரஞ்சி கோப்பை நிலைக்கு பந்து வீசும் திறன் போதுமான அளவில் இருப்பதாக பாலாஜி தான் என் மீது நம்பிக்கை வைத்தார்.

ரஞ்சி கோப்பையில் கடந்த சீசனில் விளையாடியதன் மூலம் எனது கனவு நிறைவேறியது. தற்போது ஐபிஎல் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். அணியில் உள்ள சகவீரர்களிடம் அதிகம் கற்றுக்கொள்வேன். ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜாண்சன் தான் என்னுடைய ரோல் மாடல். ஐபிஎல் தொடரின் போது அவரை சந்தித்தால் சிறப்பானதாக இருக்கும்.

இவ்வாறு நடராஜன் கூறினார்.

பஞ்சாப் அணிக்காக தமிழக வீரர் முரளி விஜய் ஏற்கெனவே விளையாடி வருகிறார். கடந்த சீசனில் இந்த அணிக்காக விளையாடிய மிட்செல் ஜாண்சன் இம்முறை மும்பை அணிக்காக விளையாட உள்ளார்.

ஏழ்மையான சூழ்நிலையில் இருந்து முன்னேற்றம் கண்டுள்ள நடராஜன், பெரிய அளவிலான சோதனை ஒன்றையும் சந்தித்தார். முதல்தர கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த சில நாட்களிலேயே இவரது பந்து வீச்சு விதிமுறைகளுக்கு மாறாக இருப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து தமிழக அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான சுனில் சுப்ரமணியனின் வழிகாட்டுதல்படி தனது பந்து வீச்சில் மாற்றம் செய்த நடராஜன் முன்பை விட வலுவாக தமிழக அணிக்கு திரும்பினார். இந்திய அணியில் ஜாகீர்கானுக்கு பிறகு இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் நிரந்தரமான வகையில் அணியில் இடம் பெறவில்லை.

கடந்த ஆண்டு ஒருசில போட்டிகளில் விளையாடிய பரிந்தர் சரணும் தற்போது இருந்த இடம் தெரியாத நிலையிலேயே உள்ளார். இதனால் ஐபிஎல் தொடரை சரியாக முறையில் நடராஜன் பயன்படுத்திக் கொண்டால் இந்திய அணிக்குள் நுழையும் தொலைவு வெகுதூரத்தில் இல்லை.

மிரட்டல் யார்க்கர்கள்

டிஎன்பிஎல் தொடரில் கடந்த ஆண்டு தூத்துக்குடி-திண்டுக்கல் அணிகள் மோதிய ஒரு ஆட்டம் டை யில் முடிவடைந்தது. இதனால் வெற்றியை தீர்மானிக்க கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில் அபிநவ் முகுந்துக்கு எதிராக மிகத்துல்லியமாக 6 பந்துகளையும் யார்க்கர்களா வீசி திண்டுக்கல் அணியை வெற்றிபெறச் செய்தார் நடராஜன். இதன் மூலம் அவர் அப்போதே அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x