

இந்தியாவின் நட்சத்திர பாட்மிண்டன் வீராங்கனைகளான பிவி.சிந்து, மற்றும் சாய்னா நெவால் ஆகியோர் மலேசிய ஓபன் பாட்மிண்டன் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினர்.
ரியோ ஒலிம்பிக் வெள்ளி வீராங்கனையான பி.வி.சிந்து, தரவரிசையில்ல்லாத சீன வீராங்கனை சென் யுஃபெய் என்பவரிடம் 18-21, 21-19, 21-17 என்ற செட்களில் போராடி தோல்வியடைந்தார். கடந்த ஞாயிறன்று இந்தியா ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சிந்து தரவரிசையில் இல்லாத வீராங்கனையிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அதுவும் ஒரு மணி நேரம் 8 நிமிடங்களில் சிந்து தோல்வி அடைந்தார்.
மற்றொரு நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால் ஜப்பான் வீராங்கனை அகானே யாமகுச்சி என்பவரிடம் 19-21, 21-13 21-15 என்ற செட்கணக்கில் தோல்வி தழுவி வெளியேறினார், யாமகுச்சி தரவரிசையில் 4-ம் இடத்தில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்திய ஆடவர் பிரிவில் அஜய் ஜெயராம் சீன வீரர் கியோ பின் என்பவரை நேர் செட்களில் வீழ்த்தி முதல் சுற்றை வென்றுள்ளார்.