Last Updated : 17 Oct, 2014 08:58 AM

 

Published : 17 Oct 2014 08:58 AM
Last Updated : 17 Oct 2014 08:58 AM

சட்டத்தின் முன் அனைவரும் சமம்; உறவுகள் கிடையாது: ஃபாலி எஸ்.நாரிமன் சிறப்பு பேட்டி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் ஆஜராகி வாதிடுவேன். அப்பா-மகன் உறவை காரணம் காட்டி என்னை கட்டிப்போட முடியாது.

ஏனென்றால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் கூறியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா சார்பாக வழக்கறிஞர் நாரிமன் ஆஜராக கூடாது. ஏனென்றால் அவரது மகன் ரோஹின்டன் நாரிமன் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கிறார்.

மேலும் ஜெயலலி தாவிற்கு தண்டனை வழங்கியுள்ள பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, ஏற்கெனவே ரோஹின்டன் வழங்கிய தீர்ப்பு ஒன்றை தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கடந்த சில தினங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கடிதமும் அளித்துள்ளார்.

இது தவிர ஜெயலலிதா சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர் நாரிமன், இதே வழக்கில் 1998-99 காலகட்டத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக ஆஜராகி வாதிட்டுள்ளார். ஜெயலலிதாவிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் நாரிமன் முன் வைத்த வாதங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில் தற்போது ஜெயலலிதா சார்பாக நாரிமன் ஆஜரானால் நீதித்துறையின் வரம்புகளை மீறுவதாக இருக்கும் என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்றத்தில் சந்திப்பேன்

இந்த நிலையில் நாரிமன் மீதான விமர்சனங்களை அவரிடம் எடுத்துக்கூறி, கருத்துக் கேட்டோம். அவர் கூறியது. ‘‘என் மீது கூறப்படும் அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்பாக பதில் அளிப்பேன். என் மீதான அனைத்து புகார்களையும் சட்டத்தின் துணையுடன் நீதிமன் றத்தில் சந்திப்பேன்.

இத்தனை ஆண்டு அனுப வத்தில் நான் படித்த‌ சட்டமும், நான் குருவாக மதித்து போற்றும் ஜெம்செட்ஜி கங்காவும் என்ன சொல்லி கொடுத்தார்களோ அதனை பின்பற்றுகிறேன்.

மற்றபடி, காழ்ப்புணர்வு காரணமாகவும், அரசியல் காரணமாகவும் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பொதுவெளியில் பதில் சொல்வது நியாயமாக இருக்காது. இந்திய நீதித்துறையை மதிக்கும் அனைவரை பொறுத்த வரையும், ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம். இங்கு உறவுகளுக்கு இடம் கிடையாது.

அப்பா-மகன், மாமா, சித்தப்பா, உறவினர்கள் என எதுவும் கிடையாது. இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன் றங்களிலும் உறவு ரீதியாக தொடர்புடையவர்கள், வழக்கை நடத்தி நீதியை நிலைநாட்டி இருக்கிறார்கள். அதற்கு என்னால் பல உதாரணங்களை குறிப்பிட முடியும்.

எனவே எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் நான் ஏற்கும் வழக்கில் ஆஜராகி வாதிடுவேன். உறவுகளைச் சொல்லி என்னை கட்டிப்போட முடியாது. சட்டத்தின் முன் அனைவரும் ஒன்றே என்பதை மறந்துவிடக் கூடாது'' என்றார்.

ஜாமீன் அடிப்படை உரிமை

இறுதியாக அவரிடம் ஜெயலலிதா தரப்பில் முன் வைக்க இருக்கும் வாதங்கள் குறித்து கேட்டபோது, ‘‘என்னை மன்னித்து விடுங்கள். அதனை நீதிமன்றத்தில் தான் கூறமுடியும். ஆனால் மருத்துவ காரணங்களையும், உடல் உபாதைகளையும் முன் வைத்து வாதிட போகிறேன். அதுமட்டுமில்லாமல் சட்டப்படி ஜாமீன் கோருவது என்பது அடிப்படை உரிமை. அதனை யாராலும் மறுக்க முடியாது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x