Published : 25 Apr 2017 04:55 PM
Last Updated : 25 Apr 2017 04:55 PM

வாய்ப்பில்லாமல் ஐபிஎல் கிரிக்கெட்டில் உட்கார்ந்திருப்பது வேஸ்ட்: ஏமாற்றத்தால் மனம் மாறும் ஜேசன் ராய்

குஜராத் லயன்ஸ் அணிக்கு ஆடிவரும் இங்கிலாந்தின் அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய், நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து விலகி சர்ரே அணிக்காக ராயல் லண்டன் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கவனம் செலுத்துவது சிறந்தது என்று கூறியுள்ளார்.

டெய்லி மிரர் பத்திரிகையில் அவர் கூறியிருப்பதாவது:

நான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர் ஆண்ட்ரூ ஸ்ட்ராசுடன் ஆலோசித்து வருகிறேன். ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து பாதியில் விலகி ராயல் லண்டன் கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக ஆடலாம் என்பது பற்றி சிந்தித்து வருகிறேன்.

50 ஓவர் கிரிக்கெட்டில் ஆடுவது சிறந்தது என்று எனக்குத் தோன்றுகிறது. குறிப்பாக ஐபிஎல் கிரிக்கெட்டில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைப்பதில்லை. இது ஒருவிதத்தில் விரயமாகவே உள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு முன்பாக சர்ரேவுக்காக 3 போட்டிகளில் ஆடுவது சிறப்பாக இருக்கும் என்றே கருதுகிறேன். இது மிகச்சிறந்த தயாரிப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் நல்ல பார்மில் இருக்கிறேன், ஆனால் அணியில் தேர்வு செய்யப்படுவது பற்றி நான் எதுவும் செய்ய முடியாது. எனவே இங்கிலாந்து கிரிக்கெட் சீசனுக்குத் தயார் செய்து கொள்வது உருப்படியான காரியமாக இருக்குமென்று கருதுகிறேன். சாம்பியன்ஸ் டிராபி வருவதால் இத்தகைய முடிவுகளை நோக்கி நகர்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறென். இது குறித்து ஆண்ட்ரூ ஸ்ட்ராசிடம் ஆலோசித்து வருகிறேன்.

இவ்வாறு கூறினார் ஜேசன் ராய்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர் ஜேசன் ராய் குஜராத் லயன்ஸ் அணிக்காக 3 போட்டிகளில் ஆடியுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 12 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார், ஹைதராபாத் அணிக்கு எதிராக 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ராய் 6-ம் இடத்தில் இறங்கி 14 நாட் அவுட்டாக திகழ்ந்தார்.

இந்நிலையில் அவரது மனநிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x