Published : 30 Apr 2014 09:49 PM
Last Updated : 30 Apr 2014 09:49 PM

மும்பை மீண்டும் தோல்வி: 15 ரன்களில் ஹைதராபாத் வெற்றி

ஹைதராபாதுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில், மும்பை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இன்று நடந்த போட்டியோடு சேர்த்து, இதுவரை நடந்த 5 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயித்த கடின இலக்கான 172 ரன்களை விரட்ட பென் டங் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் சர்மா புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதிரடி ஆட்டக்காரர் கோரே ஆண்டர்சனும், ஒரு ரன் மட்டுமே எடுத்து ஸ்டெய்னின் பந்தில் பெவிலியன் திரும்பினார். இந்தத் தொடரில் தனது முதல் போட்டியில் ஆடும் டங், 20 ரன்களுக்கு வீழ்ந்தார்.

தொடர்ந்த பொல்லார்ட் மற்றும் ராயுடு ஜோடிக்கு ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் மேலும் நெருக்கடி தந்தனர். இதையும் மீறி, பொல்லார்ட், எதிரணியின் பந்துவீச்சை பவுண்டரி, சிக்ஸர்கள் என விரட்டினார். 5 ஓவர்களில் 67 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 16-வது ஓவரில் ராயுடு 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இது மும்பை அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

மறுமுனையில் தொடர்ந்த பொல்லார்ட் 37 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் அரை சதத்தை எட்டினார். மிஸ்ரா வீசிய 17-வது ஓவரில் 27 ரன்கள் சேர்த்து, தன் அணிக்கு பொல்லார்ட் நம்பிக்கையூட்டினார். ஆனால், அடுத்த மூன்று ஓவர்களை வீசிய ஸ்டெய்ன், புவனேஷ்வர் குமார் மற்றும் இர்ஃபான் பதான் ஆகியோர், ரன்களைக் கட்டுப்படுத்தி 3 ஓவர்களில் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மும்பையின் வெற்றிக்கு போராடிய பொல்லார்ட் 48 பந்துகளில் 78 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களைச் சேர்த்தது. ஆட்டநாயகனாக புவனேஷ்வர் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தோல்வி, மும்பை அணி பெறும் 5-வது தொடர் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்களாக தவாண் மற்றும் ஃபின்ச் களமிறங்கினர். கேப்டன் தவான் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஃபின்ச் 16 ரன்களுக்கு வீழ்ந்தார். 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் லோகேஷ் ராகுல், டேவிட் வார்னர் ஜோடி இணைந்தது.

மும்பை பந்துவீச்சாளர்களை எந்த சூழ்நிலையிலும் ஆதிக்கம் செலுத்த விடாமல் ராகுல், வார்னர் இணை ரன் சேர்ப்பில் ஈடுபட்டது. இந்த ஜோடி 73 பந்துகளில் 100 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. வார்னர் 41 பந்துகளில் அரை சதத்தைக் எட்டினார்.

தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்த வார்னர், 51 பந்துகளில் 65 ரன்களுக்கு ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆடவந்த சாமி, தான் சந்தித்த முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். ஆனால் அதே ஓவரின் கடைசி பந்தில் 10 ரன்களுக்கு வெளியேறினார்.

துரதிர்ஷ்டவசமாக ராகுல் 46 ரன்களுக்கு மலிங்காவின் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்து, அரை சதத்தை தவறவிட்டார். 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x