அஸ்வின், சாஹா ஆட்டத்தால் முதல் நாளில் தப்பிய இந்தியா

அஸ்வின், சாஹா ஆட்டத்தால் முதல் நாளில் தப்பிய இந்தியா
Updated on
1 min read

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 234 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அஸ்வின் 75 ரன்களுடனும், சாஹா 46 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

126 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த இந்திய அணியை, அஸ்வினும், சாஹாவும் தங்களது நிதானமான, திறமையான ஆட்டத்தால் மீட்டனர். தேநீர் இடைவேளைக்கும் பின் களத்தில் ஆடிய இந்த ஜோடி கிட்டத்தட்ட 40 ஓவர்களை சந்தித்து 108 ரன்களை சேர்த்தது.

முன்னதாக டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. ஆரம்பத்திலேயே தவான் 1 ரன்னிலும், அடுத்து ஆட வந்த கேப்டன் விராட் கோலி 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, ரஹானே - கே.எல்.ராகுல் களத்தில் இணைந்தது.

நேற்றைய ஆடுகளம் பந்து பவுன்ஸ் ஆக ஏதுவாக இருந்ததால் மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர்கள் அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு இந்திய பேட்டிங்கை சோதித்தனர். பொறுப்பாக ஆடிய ராகுல் 64 பந்துகளில் அரை சதத்தை எட்டினாலும் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

போட்டியில் புஜாராவுக்கு பதிலாக களமிறங்கிய ரோஹித் சர்மாவும் (9 ரன்கள்) உணவு இடைவேளைக்கு பிறகு ஒரு சில ஓவர்களே நிலைத்தார். அடுத்து ரஹானேவுடன் இணைந்த அஸ்வின் நிதானமாக ஆடி ரன் சேர்த்தார். கேப்ரியல் தவிர மற்ற மே.இ.தீவுகளின் பந்துவீச்சாளர்கள் அனைவரும் இந்தியாவின் ரன் சேர்ப்பை கட்டுப்படுத்தினர்.

தேநீர் இடைவேளைக்கு 3 ஓவர்கள் இருக்கும்போது ரஹானே ஆட்டமிழந்தார். அவர் 133 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்தார்.

அஸ்வினை காப்பாற்றிய நோ பால்

அஸ்வின் 35 ரன்கள் எடுத்திருந்த போது கேப்ரியல் வீசிய பந்தை பாயிண்ட் பகுதிக்கு விரட்ட அங்கிருந்த சேஸ் அதை தடுமாறிப் பிடித்தார். ஆனால் கேப்ரியல் பந்துவீசும் போது அவரது பின்னங்கால் எல்லைக் கோட்டத் தாண்டி சென்றதால் அது நோ பால் என அறிவிக்கப்பட்டது. இது அஸ்வினுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

தொடர்ந்து அவர் 157 பந்துகளில் அரை சதம் கடந்து நாள் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். குறிப்பாக அஸ்வின், சாஹா இருவருமே சுழற்பந்து வீச்சில் சற்று தடுமாறி இருமுறை ஷார்ட் லெக் ஃபீல்டரிடம் கேட்ச் கொடுக்க அவர் இருமுறையும் அந்த கடின வாய்ப்பை தவறவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in