

பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற 188 ரன்கள் என்ற இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் நேற்று 81 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்று சமன் ஆகியுள்ளது.
முதல் இன்னின்சில் மே.இ.தீவுகளின் புதிய சுவர் சேஸ் 131 ரன்களை எடுக்க ஹோல்டர் 58 ரன்களுடன் அவருக்கு உறுதுணை புரிய 312 ரன்களை எடுத்தது மே.இ.தீவுகள். பாகிஸ்தான் தரப்பில் ஆமிர் 3 விக்கெட்டுகளையும், மொகமது அப்பாஸ் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியில் அசார் அலி (105) ஷேசாத் (70) நல்ல தொடக்கம் கொடுத்தாலும் இடையில் விக்கெட்டுகள் சரிய கேப்டன் மிஸ்பா 99 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் 393 ரன்கள் எடுத்து 81 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்நிலையில் 2-வது இன்னிங்சை மே.இ.தீவுகள் ஆடி ஷாய் ஹோப் என்ற வீரரின் அருமையான 90 ரன்களுடன் 268 ரன்களுக்குச் சுருண்டது, யாசிர் ஷா 94 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
நேற்று 5-ம் நாள் ஆட்டத்தில் 188 ரன்கள் வெற்றி இலக்குடனும், தொடரை வெல்லும் கனவுடனும் பாகிஸ்தான் களமிறங்கியது.
சீரிய ஷனன் கேப்ரியல்:
கடைசி நாளில் வேகப்பந்து வீச்சாளர் ஷனன் கேப்ரியல் பந்து வீச்சில் தீப்பொறி பறந்தது. பாகிஸ்தான் பேட்ஸ்மென்கள் பிட்ச் பற்றிய பயத்தில் மிகவும் மட்டைப்போட்டு ஆடும் தடுப்பாட்டத்தைக் கையாண்டது தவறாகிப் போனது. முதலில் அசார் அலி, கேப்ரியலின் ஷார்ட் பிட்ச் பந்தை மோசமாக மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
விராட் கோலியுடன் ஒப்பிடப்பட்ட பாபர் ஆஸம் லெக் திசை பந்தை எட்ஜ் செய்து காலியாகி, இரு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். ஜேசன் ஹோல்டரின் பந்தில் யூனிஸ் கான் எல்.பி.ஆனார்.
மிஸ்பா உல் ஹக் இன்சைடு எட்ஜில் கல்லியில் கேட்ச் கொடுத்தார், ஆனால் அப்பீல் எல்.பிக்குச் செய்தனர், நாட் அவுட் என்றவுடன் மேல்முறையீடு செய்த போது எட்ஜ் தெரிய மிஸ்பா வெளியேறினார். 2 பந்துகள் கழித்து ஆசாத் ஷபிக் நின்ற இடத்திலிருந்தே பந்தை இடித்து முதல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அகமது ஷெசாத், ஷதப் கான் அடுத்தடுத்து வெளியேற 36/7 என்று ஆனது பாகிஸ்தான். இவர்களது ஆகக்குறைந்த டெஸ்ட் ஸ்கோர் 49.
ஆனால் சர்பராஸ் அகமது, மொகமது ஆமீர் கொஞ்சம் அடித்து ஆடி 49 ஆல் அவுட் ஆபத்தைக் கடந்தனர். ஆனால் இருவரும் ஆட்டமிழக்க 34.4 ஓவர்களில் 81 ரன்களுக்குச் சுருண்டது பாகிஸ்தான்.
இந்தியா போலவே...
20 ஆண்டுகளுக்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர் தலைமை இந்திய அணி பிரையன் லாரா தலைமை மே.இ.தீவுகள் அணியிடம் இதே மைதானத்தில் இத்தகைய தோல்வியைத் தழுவியது, அப்போதும் இந்தியா 120 ரன்கள் இலக்கைத் துரத்த முடியாமல் 81 ரன்களுக்குச் சுருண்டது. சச்சின், திராவிட், கங்குலி, லஷ்மண். அசாருதீன் என்று நட்சத்திரப் பட்டாளம் இருந்தும் படுமோசமான தோல்வியைச் சந்தித்தது இந்தியா. சச்சின் டெண்டுல்கர் கடும் கோபத்துடன் 2 நாட்கள் யாருடனும் பேசாமல் இருந்தார் என்று அப்போதைய செய்திகள் விளித்தன.
பிரிட்ஜ்டவுனில் துணைக்கண்ட அணி இதுவரை மே.இ.தீவுகளை வீழ்த்தியதில்லை என்பது தற்போது பாகிஸ்தான் அணியால் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்கக் இந்தியா போலவே 81 ரன்களுக்குச் சுருண்டது பாகிஸ்தான். கேப்ரியல் 11 ஓவர்கள் 4 மெய்டன் 11 ரன்கள் 5 விக்கெட்டுகள்.