

பிரிஸ்பனில் நடைபெற்று வரும் பிரிவு பி, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த யு.ஏ.இ. அணி அயர்லாந்துக்கு 279 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.
டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் யு.ஏ.இ. அணியை பேட் செய்ய அழைத்தார். அந்த அணி 35-வது ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை எடுத்து தடுமாறி வந்த போது சத நாயகன் ஷைமன் அன்வர், அம்ஜத் ஜாவேத் 7-வது விக்கெட்டுக்காக 71 பந்துகளில் 107 ரன்களைச் சேர்த்தனர். 7-வது விக்கெட்டுக்கு இது ஒரு உலகக்கோப்பை சாதனையாகும்.
ஷைமன் அன்வர் 83 பந்துகளில் 10 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 106 ரன்கள் விளாசினார். அம்ஜத் ஜாவேத் 35 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்தார்.
மே.இ.தீவுகளுக்கு எதிராகவும் அயர்லாந்து 87/5 என்ற நிலையிலிருந்து அந்த அணியை 300 ரன்களுக்கும் மேல் அடிக்க விட்டது. இன்றும் மோசமான கடைசி ஓவர்களால் யு.ஏ.இ. ஒரு அருமையான வெற்றி வாய்ப்பைப் பெற்றுள்ளது.
முதல் 35 ஓவர்களில் அயர்லாந்து கேப்டன் போர்ட்டர்ஃபீல்ட் தனது அனுபவம் முழுமையும் உபயோகித்து அருமையான பந்துவீச்சு மாற்றங்களைச் செய்தார். எல்லாவற்றுக்கும் மேலாக அயர்லாந்து பீல்டிங்கும் அபாரமாக அமைந்தது.
குறிப்பாக பால் ஸ்டர்லிங் 10 ஓவர்கள் வீசி 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தொடக்க வீரர் அம்ஜத் அலி மட்டுமே முதல் 6 விக்கெட்டுகளை அதிகபட்சமாக 45 ரன்களை எடுத்தார். அதன் பிறகு குர்ரம் கான் 36 ரன்கள் எடுத்தார். பெரெஞ்சர், கிருஷ்ண சந்திரன், பாட்டீல், சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அயர்லாந்து 20.5 ஓவர்களில் 78/4 என்று ஆனது. குர்ரம் கானும் ஆட்டமிழக்க 32-வது ஓவரில் 125/5.
கிருஷ்ண சந்திரன் அவுட் ஆனது அயர்லாந்தின் அபாரமான பீல்டிங்குக்கு உதாரணம். ஸ்டரிலிங்கின் பந்து பேட்ஸ்மென் மட்டையில் பட்டு விக்கெட் கீப்பர் கேரி வில்சனின் தொடையில் பட்டு தெறிக்க அதனை கெவின் ஓ பிரையன் அபாரமாக ஸ்லிப்பில் பிடித்தார்.
6 விக்கெட்டுகள் இழந்த நிலையில் பவர் பிளேயும் கைகூட அன்வரும், ஜாவேத்தும் அயர்லாந்தின் ஷாட் பிட்ச் பந்துகளை பவுண்டரிக்கு விளாச தொடங்கினர். அடிக்கத் தொடங்கியவுடன் பீல்டிங் அமைப்பிலும் சொதப்பல் ஏற்பட்டது. மிட் ஆன், மிட் ஆஃபை வட்டத்துக்குள் நிறுத்தி வைத்துக் கொண்டு துல்லியமாக வீசாமல் ஓவர் பிட்ச் பந்துகளை வீசினர். அதே போல் போதிய பீல்டிங் பாதுகாப்பு இல்லாமல் ஷாட் பிட்ச் பந்துகளையும் வீசினர்.
இதனால் 35-வது ஓவருக்குப் பிறகு 9 ஓவர்களில் 94 ரன்கள் வந்தது. ஷைமன் அன்வர் 51 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் அரைசதம் கண்டார். அதன் பிறகு அடுத்த 32 பந்துகளில் மேலும் 56 ரன்களை விளாசினார். இதில் 79 பந்துகளில் அவர் சதத்தை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 28 பந்துகளில் அவர் அடுத்த 50 ரன்களை விளாசினார். புதுவகையான ஷாட்டையும் அதில் ஆடினார்.
எனவே ஒரு அருமையான சதத்தை அசோசியேட் அணிக்காக அடித்துக் கொடுத்தார் ஷைமன் அன்வர். யுஏஇ அணி 278 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் என்று முடிந்தது.
அயர்லாந்து அணியில் சோரென்சன், கியூசக், ஸ்டர்லிங், கெவின் ஓ பிரையன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இடது கை ஸ்பின்னர் டாக்ரென் 39 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.
தற்போது அயர்லாந்து இலக்கைத் துரத்தி வருகிறது அந்த அணி 18 ஓவர்களில் 70/1 என்று நிதானமாக சென்று கொண்டிருக்கிறது. அந்த அணியின் பலமாக கேப்டன் போர்ட்டர்ஃபீல்ட் 29 ரன்களுடனும் அனுபவமிக்க, எட் ஜாய்ஸ் 37 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். வெற்றிக்குத் தேவைப்படும் ரன் விகிதம் 6.57.