Published : 09 Jun 2017 02:12 PM
Last Updated : 09 Jun 2017 02:12 PM

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆடுவது போல் இருந்தது: இலங்கை கேப்டன் மேத்யூஸ்

சாம்பியன்ஸ் டிராபியில் சற்றும் எதிர்பாராத வகையில் இந்திய அணியின் பெரிய இலக்கை விரட்டி வென்ற இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் ‘உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆடுவது போல் இருந்தது’ என்று கூறியுள்ளார்.

ஆட்டம் முடிந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மேத்யூஸ் கூறியதாவது:

இது எங்களுக்கு மிகவும் முக்கியமான ஆட்டம். நாங்கள் வெல்வோம் என்று ஒருவர் கூட எதிர்பார்க்கவில்லை. இதுதான் எங்கள் மீதான அழுத்தத்தை அகற்றியது. நாங்கள் களத்தில் எங்களை சுதந்திரமாக வெளிப்படுத்திக் கொண்டோம். நாங்கள் சுதந்திரமாக ஆடும் போது நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதை நீங்கள் பார்த்தீர்கள். இதுதான் எங்கள் டிரேட்மார்க்.

நாங்கள் எங்கு சென்று ஆடினாலும் இலங்கை ரசிகர்கள் எங்களுக்கு உற்சாகமூட்டி வருகின்றனர். அவர்கள் கேளிக்கை விரும்பிகள், நாங்கள் அவர்களுக்காக வெற்றி பெற விரும்பினோம். குறிப்பாக வெள்ளத்தில் நிறைய உயிரிழப்பை சந்தித்து விட்டோம். குறைந்தது இந்த வெற்றி மூலம் அவர்களிடத்தில் சிறு புன்னகையை வரவழைத்துள்ளோம்.

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆடுவது போன்ற சூழல் இருந்தது. ஆரவாரத்துடன் சூழல் பிரமாதமாக இருந்தது. இந்திய ரசிகர்களும் அவர்கள் பின்னால் இருக்கிறார்கள் என்பதை அறிவோம். எங்களுக்கு ஆதரவு அளித்த இலங்கை ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று குசல் பெரேரா காயமடைந்து பேட்டிங்கில் பாதியிலேயே திரும்பி வந்தது கொஞ்சம் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் தோல்வி ஏற்பட்டிருந்தால் கூட பெரிய விஷயமாக பார்க்க மாட்டேன்.

மெண்டிஸ், குமார் சங்கக்காராவைச் சந்தித்து பேட்டிங் ஆலோசனைகளைப் பெற்றார். இந்தப் பிட்ச்களில் எப்படி ஆட வேண்டும் என்பது உட்பட பல விஷயங்களை அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். ஆட்டத்துக்கு முதல் நாள் வீரர்கள் சங்கக்காராவைச் சந்தித்து பெற்ற ஆலோசனைகளை களத்தில் அமல்படுத்தினர்.

மீண்டும் கூற வேண்டுமெனில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று ஒருவரும் நினைக்கவில்லை. எனவே நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினால், நாங்கள் எந்த ஒரு அணியையும் வீழ்த்துவோம்.

இவ்வாறு கூறினார் மேத்யூஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x