

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் தலைசிறந்த வீரர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆனால் டெஸ்ட் போட்டிகளில் தலைசிறந்தவர் என்று கூறுவதற்கு காலம் கனியவில்லை என்கிறார் ரிக்கி பாண்டிங்.
சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிகையில் பாண்டிங் கூறியதாவது:
ஆம் விராட் கோலி சிறந்த பேட்ஸ்மென் தான். 6-7 மாதங்களுக்கு முன்பாகவே நான் இவ்வாறு நினைத்தேன், ஆனால் தற்போது இன்னும் கூட அவர் சில அடிகள் முன்னேறியுள்ளார்.
இப்போதைக்கு அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த வீரர் எனலாம், அவரது ஒருநாள் சாதனைகள் இதுவரை ஆடிய அனைவரையும் ஒப்பிடும் போது சிறந்ததாக உள்ளது (27 சதங்கள்) ஆனால் டெஸ்ட் போட்டிகளில் இவ்வாறு கூற இன்னும் கொஞ்சம் காலம் கனிய வேண்டும்.
மிகப்பெரிய வீரர்கள் பட்டியலில் கோலியை அதற்குள் சேர்க்க முடியாது, இன்னும் சிறிது காலம் ஆகவேண்டும். கிரேட் பிளேயர்கள் நாம் கூறுவது டெண்டுல்கர்கள், லாராக்கள், காலிஸ்கள் ஆகியோர் 120, 130, 200 டெஸ்ட்களை ஆடியவர்கள். விராட் இன்னும் பாதி கிணறு கூட தாண்டவில்லை.
விராட் கோலியைப் பொறுத்தவரை ஒரு விஷயம் என்னவெனில் சவால் என்று வரும்போது அவர் தன்னுடைய சவுகரிய பிரதேசத்தை விட்டு வெளியே வந்து விடுவார், உடனடியாக ஆக்ரோஷமடைவார். இது அவருக்கும் நல்லதாக இருக்கலாம், சில வேளைகளில் எதிரணியினருக்கும் நல்லதாக அமைந்து விடலாம்.
எனினும் இந்தத் தொடரைப் பொறுத்தவரை பொறுத்திருந்து பார்ப்போம். அவர் என்னைப்போன்ற ஒரு குணாதிசியம் கொண்டவராகவே நான் பார்க்கிறேன். இருதயத்தில் உதிப்பதை வெளியில் தெரிவித்து விடும் ஒரு கேரக்டர் அவருடையது. அவர் ஆக்ரோஷமானவர்தான்.
இந்தியாவில் நான் விளையாடும் போது ஒன்றைக் கற்றுக் கொண்டேன், அது, இந்திய அணி தனக்கு உருவாக்கிக் கொள்ளும் உத்வேகம்தான். இந்த உத்வேகத்தை ஆஸ்திரேலியா அல்ல எந்த ஒரு எதிரணியினரும் நிறுத்தினால்தான் இந்திய அணியை அவர்கள் மண்ணில் ஆட்கொள்ள முடியும்.
விராட் கோலியைப் பொறுத்தவரையில் எதிரணியினர் செய்ய வேண்டியது என்னவெனில் அவர் பவுண்டரி அடிக்கும் பகுதிகளை அடைத்து விட வேண்டும். வேறு பல இடங்களில் அவர் ரன்களை எடுக்குமாறு பணிக்க வேண்டும், இதன் மூலம் அவர் ரன்கள் எடுக்க நீண்ட நேரம் ஆடவைக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார் பாண்டிங்.