

ராஞ்சி டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று ஆஸ்திரேலியாவின் 451 ரன்களுக்கு எதிராக இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்துள்ளது.
ஆட்ட நேர முடிவில் முரளி விஜய் 42 ரன்களுடனும், புஜாரா 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். கே.எல்.ராகுல் அருமையான 67 ரன்களுடன் கமின்ஸ் பந்தில் வேடிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தேநீர் இடைவேளைக்கு சற்று முன்பாக இந்திய அணி களமிறங்கியது. கமின்ஸ், ஹேசில்வுட்டுக்கும் புதிய பந்து கொஞ்சம் ஸ்விங் ஆனது. தொடக்க வீரர்களான விஜய், ராகுல் வழக்கமான பீட்டன்கள் ஆனார்கள். ஓகீஃபுக்கு பந்துகள் மிக மெதுவாகத் திரும்பின, லயனுக்கு பிட்சில் உதவியில்லாததால் ரவுண்ட் த விக்கெட்டில் வீசி கோணத்தை மாற்றி மாற்றி வீசிப்பார்த்தார்.
ஆனால் ஆஸ்திரேலியாவுக்காக இன்று நன்றாக வீசியவர் என்றால் கமின்சைக் கூறலாம். வேகத்தை கூட்டியும் குறைத்தும், பவுன்சர், புல்லெந்த், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேயும் உள்ளேயும் என்று வீசினார், இதனுடன் ஸ்லோ பவுன்சர், கட்டர்கள் என்று நிறைய வெரைட்டி காண்பித்தார். இப்படிப்பட்ட ஸ்லோ பவுன்சர் ஒன்றுதான் ராகுலின் விக்கெட்டுக்குக் காரணமானது சரியான லெந்தில் பிட்ச் ஆகி உள்ளே வந்தது ராகுலின் கிளவ் மேல்பகுதியில் தொட்டு வேடிடம் கேட்ச் ஆனது.
ராகுல் 102 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். முரளி விஜய் அளவுக்கதிகமான எச்சரிக்கையுடன் ஆடினார், ஓரிருமுறை உரத்த எல்.பி.முறையீடுகள் எழுந்தது, தப்பினார். ஒருமுறை இன்சைடு எட்ஜ் காப்பாற்றியது. அவர் அதன் பிறகு உறுதியுடன் ஆடி 42 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருக்கிறார். புஜாரா 10 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
முதல் விக்கெட்டுக்காக ராகுல், விஜய் 91 ரன்களைச் சேர்த்தனர்.