

தோள்பட்டைக் காயம் காரணமாக 4-வது டெஸ்ட் போட்டியில் கோலி ஆடாததற்கு அடுத்த மாதம் தொடங்கும் ‘பண மழை’ ஐபிஎல் தொடரே காரணம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாட்ஜ் சர்ச்சைக் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ஆடிய பிராட் ஹாட்ஜ், குஜராத் லயன்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவர் மேலும், சர்ச்சைக்குரிய விதத்தில் ஐபிஎல் தொடக்க போட்டியான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருவுகும், சன் ரைசர்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும் போட்டியில் ஆடினால் அது ‘அசிங்கமானது’ என்று கூறியுள்ளார்.
டெய்லி டெலிகிராப் பத்திரிகைக்கு பிராட் ஹாட்ஜ் கூறியதாவது:
ஒரு விளையாட்டு வீரராக அவர் காயம் சீரியசானதே என்று நினைக்கத் தோன்றுகிறது, இரண்டு வாரங்களில் அவர் ஐபிஎல் முதல் போட்டியில் அவர் ஆடுவார் என்றே கருதுகிறேன், காயம் சீரியஸ் என்றால் அவர் ஆடக்கூடாதுதானே.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மதிப்பு மிக்க இந்த டெஸ்ட் தொடரை வெல்வதற்கு அவர் காயம் காரணமாக ஆடவில்லை எனும்போது ஐபிஎல் முதல் போட்டியில் இன்னும் 2 வாரங்களில் அவர் ஆடினார் என்றால் அது அசிங்கமானது.
கேப்டனாக அவர் டெஸ்ட் போட்டியில் ஆட வேண்டும் என்றே பலரும் எதிர்பார்ப்பார்கள், அதே போல் ஐபிஎல் போட்டியிலும் அவர் ஆட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
விராட் மட்டுமல்ல முன்பு வேறு சில வீர்ர்களும் இவ்வாறு செய்துள்ளனார். ஏனெனில் இது பணமழை தொடர். கோலிக்கு நிறைய பணம் கொடுக்கிறார்கள், எப்படியிருந்தாலும் அவருக்கு பணம் கிடைக்கிறது எனவே இது விஷயமல்ல, ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்று நிறைய வீரர்கள் விரும்புவார்கள், ஏனெனில் இது உலகம் முழுதும் அனைத்து வீரர்களுக்கும் முக்கியமான தொடர் என்றே கருதப்படுகிறது” என்றார்.
இவரோடு மட்டுமல்லாமல், பிற முன்னாள்களான பிரெண்டன் ஜூலியன், பிராட் ஹேடின் ஆகியோரும் கோலி மீது கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஜூலியன் கூறும்போது, “விராட் கோலி குளிர்பானங்களைச் சுமந்து வந்தது ஆச்சரியமளிக்கிறது, இதுதான் கேப்டன் என்று கூறப்படுகிறது, தோள்காயம் என்பதால் விளையாஅடவில்லை ஆனால் டிரிக்ஸ் சுமந்து வருவது ஆச்சரியம்தான்.
எனக்குக் கோலியை மிகவும் பிடிக்கும், இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் மிகப்பெரிய வீரர், ஆனால் அதற்காக டிரிங்க்ஸ் சுமக்க வேண்டிய தேவையில்லை. காயமடைந்துள்ளீர்கள் என்றால் இதில் என்ன அர்த்தமிருக்கிர்றது” என்றார்.
பிராட் ஹேடின் கூறும்போது, “ரஹானே கேப்டனாக பொறுப்பு வகிக்கிறார், இது ரஹானெயின் நேரம், ஆலோசனைகள் இருந்தால் ஓய்வறையில் கூற வேண்டும். காயமடைந்து தோள்பட்டையில் ஐஸ் வைத்து கொள்வதை விடுத்து டிரிங்க்ஸ் எடுத்து வரலாமா?” என்று கூறியுள்ளார்.