

செயிண்ட் லூசியா பிட்ச் ஷாட்களை சுதந்திரமாக ஆடுவதற்கு வசதியானதல்ல என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
126/5 என்ற நிலையிலிருந்து அஸ்வின், சஹா சதங்களினால் 353 ரன்களை எடுத்த இந்திய அணி அதன் பிறகு மே.இ.தீவுகள் பேட்டிங்கின் உறுதியைச் சந்தித்தது.
இந்நிலையில் சதம் எடுத்த அஸ்வின் கூறும்போது, “நாங்கள் இருவரும் களத்தில் இணைந்த போது பிரச்சினை இருந்தது. இந்தப் பிட்ச் கடினமானது. அதாவது ஏதோ ஒரு பந்தை நாம் எட்ஜ் செய்யலாம் அல்லது நல்ல பந்து ஒன்று விழுந்து விடும் என்ற நிலையே இருந்தது. ரன்கள் எடுக்க கடினமாகவே இருந்தது.
அதனால்தான் ரன்கள் வராவிட்டாலும், நிற்பது என்று முடிவெடுத்தோம் நினைத்தது போல் சாதக பலன் பிற்பாடு ஏற்பட்டது. இது ஒரு நல்ல கூட்டணி, இருவரும் பரஸ்பரம் உறுதுணையாக இருந்தோம்.
ஜமைக்கா டெஸ்டிலிருந்து எங்களுக்கு கொஞ்சம் உத்வேகம் கிட்டியது. மே.இ.தீவுகள் அணியை சுருட்டி மடித்து விடுவோம் என்ற எண்ணத்திலெல்லாம் நாங்கள் இங்கு வரவில்லை. அவர்கள் ஒரு டெஸ்ட் அணி, அவர்கள் உள்நாட்டில் ஆடுகின்றனர். இது கடினமாக இருக்கும் என்றே எதிர்பார்த்தோம்.
ஒருவேளை பிற்பாடு இந்த இன்னிங்ஸ் தொடரை முடிவு செய்யும் சதமாகக் கூட இருக்கலாம், காரணம் அணி சிக்கலில் இருந்தது, சரியும் ஆபத்து இருக்கவே செய்தது. கொஞ்சம் சமயோசிதமும் உத்தியும் தேவைப்பட்டது; உள்நாட்டிலோ வேறு எங்கேயோ சதம் எடுப்பது போன்றதல்ல இது.
இதில் நான் உறுதியாக இருப்பதற்குக் காரணம், இந்தப் பிட்ச் ஏதோ முன்னங்காலை பந்தின் திசைக்கேற்ப நீட்டி மட்டையால் அடித்து நொறுக்குவதற்கான களம் அல்ல. மிகவும் கடினமான முதல் நாள், அதே போல்தான் 2-ம் நாள் ஆட்டமும். இந்த பிற்காப்பு ஆட்டத்தின் முழு சாதகங்களையும் இனி பயன்படுத்துவோம் என்றே கருதுகிறேன்.
சஹா தன்னை வெளிப்படுத்திக் கொண்டு சில ஷாட்களை ஆடினார். என்னைப்பொறுத்தவரை நிற்க வேண்டும் அவ்வளவே. 50-60 ரன்கள் இன்னமும் தேவை என்ற நிலையில்தான் நாங்கள் இருந்தோம்.
பிட்சில் பவுலர்களுக்கு உதவி இருக்கிறது, ஆனால் பொறுமையாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். ஓரிரு விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டால் அவர்களை கசக்கிப் பிழிந்து விடலாம்.
3ம் நாள் ஆட்டத்திலும் கட்டுப்பாட்டுடன் வீசி வந்தால், முதல் 2 மணி நேர ஆட்டம் அல்லது அடுத்த 2 மணி நேர ஆட்டத்தில் பலன்கள் நிச்சயம் கிடைக்கும்” என்றார் அஸ்வின்.