

இலங்கை அணி தனது 2-வது இன்னிங்சில் குசால் மெண்டிஸின் அற்புதமான இன்னிங்ஸ் (169*) மூலம் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் 196 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றுள்ளது இலங்கை.
சரளமாக பேட் செய்ய முடியாத ஒரு பிட்சில் குசால் மெண்டிஸ் 6/2 என்ற நிலையில் இறங்கி 143 பந்துகளில் சதம் எடுத்து மேன் மேலும் சென்றார். இவரது 169 ரன்கள் இலங்கை மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை வீரர் எடுக்கும் அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்னதாக கொழும்புவில் 1992-ம் ஆண்டு அசங்கா குருசிங்கா என்ற ஒரு அற்புதமான இடது கை பேட்ஸ்மென் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்த 139 ரன்களே அதிகபட்சமாக இருந்தது.
இவரது ஆட்டத்தினாலும் சந்திமால், டிஎம். டிசில்வா ஆகியோரது உறுதுணை இன்னிங்சும் அதலபாதாளத்தில் இருந்த இலங்கை அணியை வெற்றி வாய்ப்பை நோக்கி உயர்த்தியுள்ளது. 21 வயதேயாகும் குசல் மெண்டிஸ் தனது முதல் டெஸ்ட் சதத்தின் மூலம் இலங்கையின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாகியுள்ளார்.
அதுவும் மற்ற பேட்ஸ்மென்கள் எவரும் அரைசதத்தையே எடுக்க முடியாத நிலையில் 169 ரன்கள், அதுவும் கடினமான பிட்சில், அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, அதுவும் 3-வது இன்னிங்ஸில் கடும் நெருக்கடியில் எடுக்கப்பட்டது என்பது சாதாரண விஷயமல்ல.
நிறைய தருணங்களில் நேர் மட்டையுடன் ஆடிய மெண்டிஸ், சில வேளைகளில் லெக் திசையில் புல், கட் என்று விளாசவும் செய்தார். வேகப்பந்து வீச்சாளர்கள் அடிக்க இடம் கொடுக்கும் போது கட் ஷாட்களும் வந்தன. ஸ்வீப் ஷாட்களும் அருமை. இப்படியான ஒரு சக்தி வாய்ந்த ஸ்லாக் ஸ்வீப்பில் நேதன் லயன் பந்தை சிக்சருக்கு விரட்டித்தான் குசல் மெண்டிஸ் தனது முதல் டெஸ்ட் சதத்தை எடுத்தார். ஆனால் ஒருமுறை ஹேசில்வுட்டுக்கு அவரது பந்து வீச்சில் அவரிடமே கடினமான கேட்ச் வாய்ப்பை கொடுத்தார், 66-ல் இருக்கும் போது நேதன் லயன் ரவுண்ட் த விக்கெட்டில் வீசும் போது கால்காப்பில் வாங்கினார், கடும் முறையீடை நடுவர் மறுக்க ஆஸ்திரேலியா ஏனோ மேல்முறையீடு செய்யாமல் விட்டது. இப்போது அதற்காக நிச்சயம் வருந்துவார்கள்.
போதாக்குறைக்கு 2 ரிவியூவையும் தேவையில்லாமல் வேஸ்ட் செய்தனர் ஆஸ்திரேலியர்கள். ஆஸ்திரேலிய அணியின் புதுவரவு இடது கை ஸ்பின்னர் ஓ கீஃப் காயமடைந்து வெளியேற, ஸ்மித்தின் பந்து வீச்சு தெரிவு சுருங்கிப் போனது, பகுதி நேர வீச்சாளர்களான வார்னர், வோஜஸ் ஆகியோரை பவுலிங் செய்ய அழைக்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டார்.
மேத்யூஸ், இலங்கை ஸ்கோர் 86 ஆக இருந்த போது 4-வது விக்கெட்டாக லயனிடம் வீழ்ந்தார். அதன் பிறகு மெண்டிஸ், சந்திமால் (42) ஆகியோருடன் இணைந்து 117 ரன்கள் சேர்க்கப்பட்டன. பிறகு டி.எம்.டிசில்வா (36) மெண்டிஸ் இணைந்து 71 ரன்கள் சேர்த்தனர்.
ஆட்ட முடிவில் மெண்டிஸ் 20 பவுண்டரி 1 சிக்சருடன் 169 ரன்களுடனும், எம்.டி.கே. பெரேரா 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை ஆட்டத்தின் 4-வது நாள். ஆஸ்திரேலியாவுக்கு சோதனையான நாள்.