

ஆஸ்திரேலியாவில் நடை பெற்று வரும் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாட பெலாரஸின் விக்டோரியா அசரென்கா தகுதி பெற்றுள்ளார்.
பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான செர்பியாவின் ஜெலினா ஜான்கோவிக்கை 1-6,6-3,-6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். முதலில் தடுமாற்றத்துடன் ஆட்டத்தைத் தொடங்கிய விக்டோரியா அசரென்கா முதல் செட்டை இழந்தார். எனினும் சிறப்பாக விளையாடி அடுத்த இரு செட்களையும் வென்றார்.
அசரென்கா செய்த தவறுகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிய ஜெலினா ஜான்கோவிக் தோல்வியடைந்தார். ஆண்கள் பிரிவில் ஜப்பானின் நிஷிகோரி 6-4,5-7,6-2 என்ற செட் கணக்கில் குரேஷியாவின் மரின் சிலிச்சை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
செரீனாவிடம் வீழ்ந்தார் ஷரபோவா
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ரஷியாவின் மரியா ஷரபோவா, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸிடம் தோல்வியடைந்தார்.
நேற்று இரவு நடைபெற்ற இந்த போட்டியில் 6-2, 7-6(7) என்ற செட் கணக்கில் வென்ற செரீனா வில்லியம்ஸ், இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அவர் விக்டோரியா அசெரென்காவை எதிர்கொள்கிறார்.
கடந்த ஆண்டில் பல்வேறு வெற்றிகளைக் குவித்துள்ள செரீனா மொத்தம் 11 பட்டங்களை வென்றுள்ளார். பங்கேற்ற 82 போட்டிகளில் 78-ல் அவர் வெற்றி பெற்றார். இதேபோல இந்த ஆண்டையும் அவர் வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளார். எனவே இறுதி ஆட்டத்தில் விக்டோரியா அசரென்காவுக்கு செரீனா கடும் நெருக்கடியை அளிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.