Published : 08 Apr 2017 08:50 PM
Last Updated : 08 Apr 2017 08:50 PM

மேக்ஸ்வெல் அதிரடியில் புனேயை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இந்தூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

கேப்டன் மேக்ஸ்வெல் 20 பந்துகளில் 2 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 44 ரன்கள் விளாசி அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார். முதலில் பேட் செய்த ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சில இறுக்கமான பந்து வீச்சில் 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 19 ஓவர்களில் 164/4 என்று வெற்றி பெற்றது.

முதலில் சிக்கனப்பந்து வீச்சு:

கிங்ஸ் லெவன் பஞ்சாபின் 20 ஓவர்களில் 8 ஓவர்களில் 5 அல்லது அதற்கும் குறைவான ரன்களே எடுக்கப்பட்டது. முதலில் சந்தீப் சர்மா முதல் ஓவரிலேயே மயங்க் அகர்வாலை இன்ஸ்விங்கரில் பவுல்டு செய்தார்.

இதனையடுத்து அனுபவஸ்தர்களான ரஹானே, ஸ்மித் கூட்டணி ஏற்பட்டது. இதில் ஸ்மித் 27 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டாய்னிஸின் எழும்பிய பந்து ஒன்றில் மனன் வோராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முன்னதாக ரஹானே 15 பந்துகளில் 1 பவுண்டரி ஒரு சிக்சருடன் 19 ரன்கள் எடுத்த நிலையில் தமிழக இடது கை வீச்சாளர் நடராஜனிடம் ஆட்டமிழந்தார்.

தோனி 5 ரன்களில் நடையைக் கட்டினார். 11.2 ஓவர்களில் புனே அணி 71/4 என்று ஆனது.

பென் ஸ்டோக்ஸ் தன் விக்கெட்டை கொடுக்கக் கூடாது என்பதி நிதானம் கடைபிடித்தார், 22 சிங்கிள்களை எடுத்தார், ஸ்பின்னர்கள் அக்சர் படேல், ஸ்வப்னில் சிங் ஆகியோரை தேர்ந்தெடுத்து இவர்கள் வீசிய 14 பந்துகளில் 25 ரன்களை சேர்த்தார், இவரும் திவாரியும் இணைந்து 6 ஓவர்களில் 61 ரன்களைச் சேர்த்தனர். 32 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் ஸ்டோக்ஸ் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த போது 17.3 ஓவர்களில் 132/5 என்று இருந்தது, ஆனால் மனோஜ் திவாரி, கிரிஸ்டியன் இணைந்து 15 பந்துகளில் மேலும் 31 ரன்களை விளாச புனே அணி ஓரளவுக்கு நல்ல ஸ்கோரான 163 ரன்களை எட்டியது.

திவாரி 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 23 பந்துகளில் 40 ரன்கள் விளாச, கிறிஸ்டியன் 8 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 17 ரன்கள் எடுத்தார்.

கிங்ஸ் லெவன் சார்பில் சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளையும் அக்சர், நடராஜன், ஸ்டாய்னிஸ், ஸ்வப்னில் சிங் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

மேக்ஸ்வெல் அதிரடி:

கிங்ஸ் லெவன் அணிக்கு இருக்கும் ஒரே அச்சுறுத்தல் புனே அணியின் இம்ரான் தாஹிர்தான் அவரும் அதனை நிரூபித்தார். சஹாவை 14 ரன்களில் பவுல்டு செய்த அவர், அக்சர் படேலை 24 ரன்களில் தன் பந்து வீச்சில் தானே கேட்ச் பிடித்து வீழ்த்தினார். முதலில் ஆம்லா தொடக்கத்தில் இறங்கி 27 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 28 ரன்கள் எடுத்து லெக் ஸ்பின்னர் சாஹர் பந்தில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மனன் வோராவை டிண்டா வீழ்த்தினார். 11.1 ஓவர்களில் 85/4 என்ற நிலையில் அதிரடி வீரர் மில்லரும், கேப்டன் மேக்ஸ்வெலும் இணைந்தனர். இருவரும் இணைந்து 7.5 ஓவர்களில் 79 ரன்களை விளாசி அணியை மேலும் விக்கெட்டுகள் விழாமல் வெற்றிக்கு இட்டுச் சென்றனர். மேக்ஸ்வெல் 20 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தும் டேவிட் மில்லர் 27 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 30 ரன்கள் எடுத்தும் நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர்.

ஆட்ட நாயகனாக கிளென் மேக்ஸ்வெல் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x