

குஜராத் லயன்ஸ் பேட்ஸ்மென்கள் ரெய்னா தலைமையில் நேற்று கொல்கத்தா பவுலர்களை பிய்த்து உதறி வெற்றி பெற்றதையடுத்து ஒரு ஆட்டத்தில் மோசமாக வீசியதால் பந்துவீச்சே மோசம் என்று கூறிவிட முடியாது என்று கொல்கத்தா பயிற்சியாளர் ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா 187 ரன்கள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை, சுனில் நரைன் பேட்டிங்கில் எடுத்த அதிரடி 42 ரன்களை பந்து வீச்சில் விட்டுக் கொடுத்தார், சுனில் நரைனுக்கே இந்த கதியானது நேற்று.
வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசனை அணியில் எடுத்தது கம்பீருக்கு தவறாகிப் போனது. அவர் 3 ஓவர்களில் 31 ரன்கள் விளாசப்பட்டார்.
இது குறித்து ஜாக் காலிஸ் கூறும்போது, “ஒரு ஆட்டத்தினால் நாங்கள் மோசமான பவுலிங் குழுவாகிவிட மாட்டோம். எங்களிடம் திட்டங்கள் உள்ளன. 6 ஆட்டங்களில் ஆர்சிபி 2-ல் மட்டுமே வென்றுள்ளது. அவர்களுக்கும் நெருக்கடி உள்ளது, அதனை நாங்கள் அடுத்த போட்டியில் எங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்வோம்.
குஜராத் அணி கடைசி 5 ஓவர்களில் நன்றாக வீசினர். இந்த 5 ஒவர்களில் 46 ரன்களையே எடுத்தோம். எனவே ஏமாற்றம்தான், நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக எடுத்தோம்.
இந்த ஸ்கோரை சிறப்பாகத் தடுத்து வெற்றி பெற்றிருக்கலாம் என்றே நான் கருதுகிறேன். ஆனால் இது நிச்சயமாக எங்கள் சிறந்த பந்து வீச்சு அல்ல. ஆர்சிபி அணிக்கு எதிராக மீண்டெழுவோம்.
ஈடன் கார்டன்ஸில் இலக்கை விரட்டுபவர்கள் அதிகம் வெற்றி பெறுவதை பார்த்து வருகிறேன். எனவே பிரச்சினை அதுவல்ல அனைத்து துறைகளிலும் எங்கள் தரத்தை உயர்த்த வேண்டும்.
ஒவ்வொரு வீரருக்கும் தாங்கள் ஆட வேண்டிய இடம் தெரியும், சிலர் ஒன்றிரண்டு என்று எடுப்பார்கள், சிலர் பெரிய ஷாட்களை ஆடுவார்கள், ஆனால் ரெய்னா அனைத்திலும் திறமைபடைத்தவராக இருக்கிறார். அவருக்கு நிச்சயம் நாங்கள் சிறப்பாக வீசியிருக்க வேண்டும்” என்றார் ஜாக் காலிஸ்.