Last Updated : 12 Feb, 2014 12:00 AM

 

Published : 12 Feb 2014 12:00 AM
Last Updated : 12 Feb 2014 12:00 AM

ஏன் இந்தத் தோல்வி; எங்கே நடந்தது தவறு?

நியூஸிலாந்தில் வரலாறு படைக்கும் வாய்ப்பை இந்திய அணி மயிரிழையில் தவறவிட்டது. 407 என்னும் இலக்கைத் துரத்திய அணி விடாப்பிடியாகப் போராடி இலக்கை நெருங்கியது. கடைசியில் 40 ரன் பற்றாக்குறையுடன் தோல்வியைச் சந்தித்தது. கைக்கு எட்டியது வாய்க்கும் எட்டியிருந்தால் டெஸ்ட் வரலாற்றில் இரண்டாவது பெரிய இலக்கை எட்டிய அணி என்னும் சாதனையை நிகழ்த்தியிருக்கும் இந்தியா.

பத்தாவது தோல்வி

இந்தத் தோல்வி கடந்த மூன்று ஆண்டுகளில் அந்நிய மண்ணில் இந்தியா சந்தித்த பத்தாவது தோல்வி. ஆனால் இந்தத் தோல்வியில் இந்தியாவுக்குச் சில சாதகமான செய்திகள் கிடைத்திருக்கின்றன. 407 என்னும் இலக்கை எட்ட முடியும் என்னும் நம்பிக்கையோடு இந்திய அணி களம் இறங்கியது ஆரம்பம் முதலே தெளிவாகத் தெரிந்தது. வழக்கமாக மட்டையை வீசியும் தூக்கி அடித்தும் ஆடும் ஷிகர் தவன் இந்த இன்னிங்ஸில் மிகவும் பொறுப்போடு பொறுமையைக் கடைப்பிடித்து ஆடினார். முரளி விஜயும் சாகசத்தில் இறங்காமல் சரளமாக ரன் சேர்க்க ஆரம்பித்தார்.

எனினும் விஜயும், சேதேஷ்வர் புஜாராவும் பெரிய அளவில் பங்களிக்காமலேயே பெவிலியன் திரும்பினார்கள். ஆனால் விராட் கோலியும் தவனும் அசராமல் நின்று ஆடினார்கள். மூன்றாம் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்தார்கள். ஆனால் கோலியும் தவனும் அடுத்தடுத்து அவுட் ஆன பிறகு ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே ஆகியோரும் விரைவில் நடையைக் கட்டினார்கள். ஜடேஜாவால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தனிமரமான தோனியும் விரைவில் வீழ்ந்தார். எஞ்சிய மூவரும் சம்பிரதாயத்திற்குக் களம் இறங்கித் திரும்பிச் சென்றனர். இந்தியா வரலாறு படைக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது.

துரதிருஷ்டவசமான முடிவு

புஜாரா, ரோஹித், ரஹானே ஆகியோர் இன்னும் சிறிதளவு பங்களித்திருந்தால் வெற்றி வசமாகியிருக்கும். ஆனால் ரஹானே அவுட் ஆன முறையில் உள்ள வலுவான சந்தேகத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் இதைத் துரதிருஷ்டவசமான முடிவு என்றுதான் சொல்ல வேண்டும்.

நான்காவது இன்னிங்ஸில் 407 ரன்களை எடுக்க முடியும் என்று நம்பிக்கை ஏற்படுமளவுக்கு ஆடியதே பெரிய விஷயம்தான். இலக்கைப் பார்த்து மலைக்காமல் வேகப் பந்து வீச்சாளர்களைக் கண்டு அஞ்சாமல் இளைஞர்கள் ஆடியது பாராட்டத்தகுந்ததுதான். ஆனால் போட்டியின் தொடக்கத்திலேயே இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைக் கிட்டத்தட்டப் பறிகொடுத்துவிட்டது. வேகப்பந்து வீச்சுக்குத் தோதான களத்தில் முதலில் பந்து வீசும் வாய்ப்பு கிடைத்தபோதிலும் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

ஜாகீர் கானால் மட்டையாளரைத் திணறவைக்கும் வகையில் போட முடியவில்லை. முகம்மது ஷமியின் அனுபவமின்மை அவருக்கு எதிராக அமைந்தது. இஷாந்த சர்மாவின் கட்டுக்கோப்பின்மை அவருக்கு வில்லனாக மாறியது. விளைவு, நியூஸிலாந்து அணி 503 ரன்களைக் குவித்தது. குறைந்தது 150 ரன்களை இந்தியா அதிகமாகக் கொடுத்தது.

503-க்கு பதிலடியாக ரன் குவிக்காமல் போனது இந்தியா செய்த இரண்டாவது தவறு. ரோஹித் சர்மா மட்டுமே தாக்குப்பிடித்து 76 ரன்கள் அடித்தார். 202 ரன்களில் அணி சுருண்டதும் போட்டி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்று சொல்ல வேண்டும். ஆனால் யாருமே எதிர்பாராத திருப்பமாக, இந்திய அணியின் பந்து வீச்சு திடீரென்று வீரியம் அடைந்தது. பந்துகள் கட்டுக்கோப்பாக, துல்லியமான அளவிலும் வரிசையிலும் விழுந்தன. ஆடுகளமும் காற்றும் துணைபுரிய, நியூஸிலாந்தை 105 ரன்களுக்குள் சுருட்டினர் இந்திய பந்துவீச்சாளர்கள்.

பாழான கடின உழைப்பு

இந்த வேகத்தில் பாதியை முதல் இன்னிங்ஸில் காட்டியிருந் தால் இந்தியா இந்தப் போட்டியை எளிதாக வென்றிருக்கும். இரண்டாம் இன்னிங்ஸில் அற்புதமான பந்து வீச்சும் உறுதியான மட்டை வீச்சும் இருந்தும் கரை சேர முடியாத அளவுக்கு முதல் இன்னிங்ஸின் சறுக்கல் இந்தியாவைப் பலவீனப்படுத்தியிருந்தது. முற்பகுதியில் காட்டிய மெத்தனம் பிற்பகுதியின் கடின உழைப்பைப் பாழாக்கிவிட்டது.

முதல் இன்னிங்ஸில் இந்திய ஆட்டக்காரர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் நல்ல பந்துக்கு ஆட்டமிழக்கவில்லை. சர்மா, ரஹானே உள்ளிட்ட பலரும் தங்கள் தவறுகளினாலும் கவனக் குறைவினாலும்தான் ஆட்டமிழந்தார்கள். இரண்டாம் இன்னிங்ஸிலும் இதே நிலைதான். ட்ரைவ் செய்யத் தோது இல்லாத பந்துகளை ட்ரைவ் செய்யப் பார்ப்பது, முறையாகக் காலை நகர்த்தாமல் இருந்த இடத்திலிருந்தே பந்தைத் துரத்துவது, புல் ஷாட்டைச் சரியாக ஆடாமல் விடுவது போன்ற தவறுகளே இந்தியா மட்டையாளர்களைத் துரத்தின.

இன்னொரு முக்கியமான பிரச்சினையும் இந்திய மட்டையாளர்களிடம் உள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் அவர்கள் பந்துகளை அடித்து ஆடினார்கள். மேலெழுந்த வாரியாகப் பார்க்கும்போது இது துணிச்சலான அணுகுமுறையாகத் தெரியும். ஆனால் இரண்டு நாட்களுக்கு மேற்பட்ட அவகாசத்தில் சுமார் 407 ரன்கள் எடுக்க அவசரப்பட வேண்டிய அவசியம் என்ன? வேகப் பந்து வீச்சுக்குச் சாதகமான களத்தில் வேகப்பந்துகளை எதிர்த்துத் தாக்குதல் ஆட்டத்தை ஆடுவதே சிறந்த வியூகம் என்பதால் அவர்கள் அப்படி ஆடினார்களா அல்லது இது எதிரணியின் பந்தைத் துவம்சம் செய்யுமளவுக்குத் தன்னம்பிக்கையும் திறமையும் இருப்பதன் வெளிப்பாடா? எப்படியும் இருக்கலாம்.

தற்காப்புத் திறன்கள் இல்லை

ஆனால் டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை ஒரு மட்டையாளர் அதிரடியாக ஆடி ரன் குவிப்பதில் அதிகப் பலன்கள் இருக்கும் என்று சொல்ல முடியாது. நான்கு பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடிக்கும் ஒருவர் அடுத்த ஓவரில் அவுட் ஆகிறார் என்றால் வெற்றி பந்து வீச்சாளருக்குத்தான். மேலும், அதிக ரன்கள் இலக்காக இருக்கும்போது வேகத்தை விடவும் விக்கெட்டை இழக்காமல் வெற்றியை நோக்கிச் செல்வதே முக்கியம். அதற்குத் தடுப்பு ஆட்டத்தில் திறன் அவசியம். இன்றைய இந்திய மட்டையாளர்கள் சிலரிடம் போதிய அளவு தற்காப்புத் திறன்கள் இல்லை. அதனாலேயே அவர்கள் அடித்து ஆடத் தலைப்படுகிறார்கள் என்று நம்ப இடமிருக்கிறது.

டெஸ்ட் போட்டியில் விக்கெட் எடுக்கும் நோக்கில் தாக்குதல் வியூகத்தையே எதிரணி பெரும்பாலும் அமைக்கும். இதனால் ரன்கள் அதிகம் கசியும். எனவே ரன் வருவதை வைத்து நன்றாக ஆடுவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ரன் வந்துகொண்டிருக்கும்போதே விக்கெட்களும் விழும். இதில் கவனமாக இருக்க வேண்டும். விக்கெட்டை இழக்காமல் வேகமாக ரன் குவிப்பதைத்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியான ஸ்ட்ரோக் பிளே என்று சொல்ல முடியும். விரைவில் ரன் எடுத்து டிக்ளேர் செய்ய வேண்டிய நிலையில் இதையெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. நேரம் குறைவாக இருக்கும்போதும் ரன் வேகத்தைத் துரிதப்படுத்த வேண்டியதுதான். ஆனால் அவகாசம் அதிகம் இருக்கும்போது பதற்றம் தவிர்த்த அணுகுமுறையே சிறந்தது. அதற்கு வலுவான தற்காப்பு ஆட்டத் திறன் வேண்டும். எந்தப் பந்தைத் தொடாமல் இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய துல்லியமான அறிதல் இருக்க வேண்டும்.

எவரெஸ்ட் சிகரம்

இரண்டாவது புதுப்பந்து எடுக்கும் நேரம் நெருங்கும்போது இந்திய மட்டையாளர்கள் காட்டிய அவசரத்தில் புதுப்பந்தை எதிர் கொள்வதில் அவர்களுக்கு இருக்கும் பதற்றம் வெளிப்பட்டது. தற்காப்பு ஆட்டத்திற்கான தொழில்நுட்பத் திறன் அதிகம் இல்லாதபோது இதுபோன்ற பதற்றங்கள் ஏற்படுவது இயற்கை தான். டெஸ்ட் போட்டிகளில் நின்று ஆடும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்தியப் பந்து வீச்சாளர்கள் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே கட் செய்ய வசதியான தூரத்தில் பந்துகளைப் போட்டுக்கொண்டி ருந்தார்கள். எகிறு பந்துகளைத் தவறான வரிசையில் போட்டு நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் எளிதாகப் புல் ஷாட் அடிக்க வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தார்கள்.

இரண்டாவது இன்னிங்ஸில் நியூஸிலாந்து 105 ரன்களில் சுருண்டது எதிர்பாராத திருப்பம். அடிக்கடி இப்படிப்பட்ட திருப்பங்கள் வாய்க்காது. அடிப்படைகளில் வலுவாக இல்லாவிட்டால் இதுபோன்ற திருப்பங்களையும் அதிருஷ்டங் களையும் நம்பியே காலம் தள்ள வேண்டியிருக்கும். இல்லையெனில் நான்காவது இன்னிங்ஸில் எவரெஸ்ட் மலை ஏறுவதுபோலக் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x