

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் தகுதிச்சுற்றில் வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது.
5-வது டி20 உலகக் கோப்பை போட்டி வங்கதேசத்தில் ஞாயிற் றுக்கிழமை தொடங்கியது. தகுதிச்சுற்று என்றழைக்கப்படும் முதல் சுற்றின் முதல் ஆட் டத்தில் வங்கதேசமும் ஆப்கா னிஸ்தானும் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி, ஆப்கானிஸ்தானை முதலில் பேட் செய்ய அழைத்தது.
ரன் கணக்கைத் தொடங்கு வதற்கு முன்னதாக விக்கெட்டை இழந்தது ஆப்கானிஸ்தான். கேப்டன் முகமது ஷாசத் டக் அவுட்டாக, நஜீப் தரக்காய்-குல்பதின் நயிப் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 36 ரன்கள் சேர்த்தது. 22 பந்துகளைச் சந்தித்த நயிப் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்ட மிழக்க, ஆப்கானிஸ்தான் சரிவுக் குள்ளானது.
கரீம் சாதிக் (10) சபியுல்லா (16) ஆகியோர் தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 17.1 ஓவர்களில் 72 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான். வங்கதேசம் தரப்பில் ஷகிப் அல்ஹசன் 3.1 ஓவர்களில் 8 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அப்துர் ரசாக் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
பின்னர் ஆடிய வங்கதேச அணியில் தமிம் இக்பால்-அனாமுல் ஹக் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.4 ஓவர்களில் 45 ரன்கள் சேர்த்தது. அனாமுல் ஹக் அதிரடியாக விளையாட, மறுமுனையில் நிதானம் காட்டிய இக்பால் 27 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஷகிப் அல்ஹசன் களம் புகுந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அனாமுல் ஹக், 12-வது ஓவரின் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடிக்க, வங்கதேசம் ஒரு விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. அனாமுல் ஹக் 33 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 44, அல்ஹசன் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அல்ஹசன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இன்றைய ஆட்டங்கள்
அயர்லாந்து-ஜிம்பாப்வே, நேரம்: பிற்பகல் 3
நெதர்லாந்து- ஐக்கிய அரபு அமீரகம், நேரம்: இரவு 7
இடம்: சில்ஹெட்
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்