

எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கையின் 255 ரன்கள் வெற்றி இலக்கை 256/0 என்று இங்கிலாந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது.
தொடக்க வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ் 133 ரன்கள் எடுத்தும், ஜேசன் ராய் 112 ரன்கள் எடுத்தும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இங்கிலாந்துக்கு சாதனை வெற்றியைக் கொடுத்தனர். 34.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 256 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து.
இதற்கு முன்னர் விரட்டலில் விக்கெட் எதையும் பறிகொடுக்காமல் வெற்றி பெற்ற அணி நியூஸிலாந்து, ஜிம்பாப்வேயிற்கு எதிராக 236 ரன்களை விக்கெட்டுகளை இழக்காமல் எடுத்து வெற்றி பெற்றது. அந்தச் சாதனையை முறியடித்தனர் இங்கிலாந்து தொடக்க வீரர்கள்.
ஒருநாள் கிரிக்கெட்டில் ஜெயசூரியா, அரவிந்த டிசில்வா காலத்தில் இங்கிலாந்து இலங்கையிடம் நிறைய சாத்துமுறை வாங்கியுள்ளது. அதுவும் 2006-ம் ஆண்டு இலங்கை 5-0 என்று வெற்றி பெற்றது இங்கிலாந்து வீரர்கள், ரசிகர்கள் மனதில் தீராத வடுவை ஏற்படுத்தியிருக்கும், அதுவும் 321 ரன்கள் இலக்கை 38 ஓவர்களில் ஜெயசூரியா விளாசி வெற்றி பெற்ற போட்டியை யாரும் மறக்கமுடியாது.
நேற்று அத்தகைய புரட்டல் வரலாறுகளுக்கு பதிலடி கொடுக்குமாறு இங்கிலாந்து விக்கெட்டுகளை இழக்காமல் வென்றுள்ளதோடு, ஹேல்ஸ், ஜேசன் ராய் இலங்கை பந்து வீச்சை மைதானம் நெடுக சிதறடித்தனர். அதே ஜெயசூரியா பாணி என்றால் மிகையாகாது.
ஹேல்ஸ், ஜேசன் ராய் இருவரும் அரைசதத்திற்கு 55 பந்துகளை எடுத்துக் கொண்டனர், ஆனால் அதன் பிறகு நடந்தது படுகளம். முன்னதாக 12-வது ஓவரில் ஜேசன் ராய், சூரஜ் ரந்திவ் பந்தை மேலேறி வந்து சிக்ஸ் அடித்தார். இதனைத் தொடர்ந்து மஹரூஃப் பந்தை ஹேல்ஸ் மிட்விக்கெட் ஸ்டாண்ட்ஸுக்கு ஒரு சிக்ஸ் அடித்தார்.
அரைசதம் கண்ட பிறகு அலெக்ஸ் ஹேல்ஸ், 21-வது ஓவரில் நுவான் பிரதீப்பை மிட் ஆஃபில் ஒரு பவுண்டரியையும் நேராக ஒருசிக்சரும் அடித்தார். அதே போல் ஜேசன் ராய், சூரஜ் ரந்திவ் வீசிய 24-வது ஓவரில் ரிவர்ஸ் ஸ்வீப் அல்லது கையை மாற்றிய சுவிட்ச் ஹிட்டில் பாயிண்டில் பவுண்டரி விளாசினார். பிறகு நேராக ஒரு சிக்ஸ்.
இப்படியே போய்க்கொண்டிருந்த போது 29-வது ஓவரை சீகுகே பிரசன்னா வீச அலெக்ஸ் ஹேல்ஸ் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களை வரிசையாக விளாசித் தள்ளினார். இதில் 2-வது பவுண்டரி ஹேல்ஸின் சத பவுண்டரியாகும். முதல் சிக்ஸ் இங்கிலாந்தின் 200 ரன்களைக் கொண்டு வந்தது. இந்த ஓவரில் 27 ரன்கள் விளாசப்பட்டது.
கடைசியில் ஜேசன் ராய் 95 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 112 ரன்களையும் அலெக்ஸ் ஹேல்ஸ் 110 பந்துகளில் 10 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 133 ரன்களையும் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ இங்கிலாந்து 34.1 ஓவர்களில் 256/0 என்று சாதனை வெற்றியை நிகழ்த்தியது. இலங்கை அணியில் ரந்திவ், பிரதீப் இருவரும் 7.75 ரன்களை ஒவருக்கு விட்டுக் கொடுத்தனர். சீகுகே பிரசன்னாவுக்கு மோசமான போட்டியாக இது அமைந்தது. பேட்டிங்கில் 2 ரன்களே அடித்த இந்த புதுவரவு அதிரடி வீரர் பந்து வீச்சில் 8.1 ஓவர்களில் 78 ரன்கள் விளாசப்பட்டார். இதில் 5 பவுண்டரிகள் 5 சிக்சர்கள். ஜேசன் ராய் ஆடுவது லேசாக விரேந்திர சேவாகை நினைவூட்டியது.
முன்னதாக டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
குசால் பெரேரா 37 ரன்களை எடுத்து ராயின் அருமையான பீல்டிங்கில் ரன் அவுட் ஆனார். குணதிலக 22 ரன்களுக்கும், மெண்டிஸ் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 77/3 என்ற நிலையில் சந்திமால் (52), மேத்யூஸ் (44) இணைந்து ஸ்கோரை 159 ரன்களுக்கு உயர்த்தினர். அப்போது மேத்யூஸ் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரையும் அதிரடி வீரர் சீகுகே பிரசன்னாவையும் அடில் ரஷீத் வீழ்த்தினார். உப்புல் தரங்கா 49 பந்துகளில் அரைசதம் காண சூரஜ் ரந்திவுடன் இவர் இணைந்து கடைசி 8-வது விக்கெட்டுக்காக 63 ரன்களை சுமார் 9 ஓவர்களில் சேர்த்தனர். இதனால் இலங்கை அணி 254/7 என்று முடிந்தது. குறிப்பாக கடைசி 4 ஓவர்களில் 44 ரன்களை இருவரும் சேர்த்தனர்.
இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத் 10 ஓவர்களில் 34 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிளெங்கெட் 2 விக்கெட்டுகளையும் வில்லே 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.