

இந்திய கேப்டன் விராட் கோலி தனது மிகச்சிறந்த பார்மில் இருக்கிறார், அவர் தொட்டதெல்லாம் துலங்குகிறது என்று ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஊடகம் ஒன்றில் கிளென் மேக்ஸ்வெல் இது பற்றி கூறியதாவது:
நான் கோலியைச் சீண்டுமாறு எதுவும் கூறப்போவதில்லை. அவரைச் சீண்டுவதன் மூலம் அவர் தவறான ஷாட்களை ஆடவைக்க முடியும் என்றால் அவரைச் சீண்டலாம் என்றே நான் கூறுவேன். ஆனால் இப்போதைக்கு அவரை எதுவும் அசைப்பதாக தெரியவில்லை.
கோலி இத்தகைய பார்மில் இருக்கிறார் என்றால் அது அவருடைய உத்தி என்பதெல்லாம் இல்லை. அவர் இப்போது மிகச்சிறந்த பார்மில் உள்ளார்.
சில வீரர்களுக்கு இத்தகைய தொடர்ச்சி அமைந்து விடும். இம்மாதிரி தருணங்களில் அவர் தொட்டதெல்லாம் துலங்குகிறது அவ்வளவே.
ஏதாவது ஒரு துரதிர்ஷ்டம் அல்லது அதிர்ஷ்டங்கெட்ட முறையில் அவர் ஆட்டமிழந்தாரென்றால், உதாரணமாக முக்கிய கட்டத்தில் அவர் ரன் அவுட் ஆகி வெளியேறுகிறார் என்றால் அது அவரிடத்தில் சிறு ஐயத்தை ஏற்படுத்தும், ஒரு தீர்மானமின்மையை ஏற்படுத்தும்.
எனவே முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் அவரிடத்தில் இத்தகைய ஐயத்தை எழுப்புவோம், அது அவரது பேட்டிங் உத்தி குறித்த ஐயத்தை எழுப்புவோம், அங்கிருந்து நாங்கள் அவரை முறியடிப்போம்.
இவ்வாறு கூறினார்.