

இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை தொடங்கவுள்ள பாகிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ், இங்கிலாந்தின் நடுவரிசை பேட்டிங்கில் வலுவில்லை என்று கூறியுள்ளார்.
“இங்கிலாந்து அதன் நடுவரிசை பேட்ஸ்மென்களில் தடுமாறுகிறது என்பதை நாங்கள் அறிவோம். ஜோ ரூட் மிகச்சிறந்த வீரர், அவர்தான் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனால்தான் அவர் 3-ம் நிலையில் இறங்குகிறார். ஆனால் மற்ற பேட்டிங் பலவீனமாக உள்ளது. குக், ரூட் ஆகியோடை வீழ்த்திவிட்டால் அந்த பேட்டிங் வரிசை மீது நெருக்கடியை அதிகரிக்க முடியும். ஆனால் அவர்களை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது” என்றார்.
சசக்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பொறிபறக்கும் ரிவர்ஸ் ஸ்விங் பந்தில் வீர்ர்களைப் பாடாய் படுத்திய ரியாஸ், இங்கிலாந்து நடுவரிசை பலவீனங்களை சரியாகவே கூறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு அவ்வப்போது கைகொடுக்கும் பின்வரிசை வீரர்களும் பாகிஸ்தானின் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் பவுலிங் வரிசைக்கு முன்பாக சோபிக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது, இந்நிலையில் வஹாப் ரியாஸ் கூறுவது போல் அலிஸ்டர் குக், ஜோ ரூட் இருவரது தோள்களில் ஏகப்பட்ட சுமை உள்ளது போலவே தெரிகிறது.
ஆனால் பாகிஸ்தான் பேட்டிங் ஒட்டுமொத்தமுமே இதை விட பலவீனமாக உள்ளது, யூனிஸ் கான் நீங்கலாக மொத்த பேட்டிங்கும், இங்கிலாந்தின் ஸ்விங்கை எப்படி எதிர்கொள்வது என்பதும் பிரச்சினைதான்.
எப்படியிருந்தாலும் ஒரு சுவாரசியமான, சம்பவங்கள் நிறைய நிகழும் என்று எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து-பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் ஜூலை 14ம் தேதி லார்ட்ஸில் தொடங்குகிறது.