

உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அணியாவதற்கான அனைத்து அம்சங்களும் தற்போதைய இந்திய அணியிடத்தில் உள்ளது என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
நாளை (வியாழன்) கான்பூரில் நியூஸிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதை முன்னிட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி இதனை தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிரான தொடரில் கால்லே டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறத் தேவையான 176 ரன்களை எடுக்க முடியாமல் இந்திய அணி 112 ரன்களுக்குச் சுருண்டது, ரங்கனா ஹெராத் 7 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இந்திய அணி சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் பாரம்பரியம் மிக்கது, ஆனால் 176 ரன்கள் எடுக்க முடியாமல் இந்த இந்திய அணி தோல்வியுற்றது, ஸ்பின் பந்துவீச்சுக்கு எதிராக தற்போதைய வீரர்கள் சரியாக ஆடுவதில்லை என்ற கடும் விமர்சனங்களை எழுப்பியது.
இது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த விராட் கோலி, “ஸ்பின் பற்றி கவலையில்லை, ஆனால் நாங்கள் முன்னேற்றமடைய வேண்டிய ஒரு பகுதி அது என்பது உண்மைதான்.
நாங்கள் எங்கள் பேட்டிங் திட்டங்களை சரிவர செயல்படுத்தவில்லை. ஆனால் திருத்திக் கொண்டோம். ஆட்டத்தின் அப்பகுதியில் மேலும் முன்னேற அணி பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாம் இதில் வலுவடைய வேண்டியுள்ளது என்பது உண்மைதான். பில்ட்-அப் கூட அதிகமாகவே உள்ளது (ஊடகத்தைக் குறிப்பிட்டார்), இந்தியாவுக்கு வெளியே இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் நாங்கள் சூழ்நிலைகளை சரியாக எதிர்கொண்டோம். எனவே ஸ்பின் பந்து வீச்சு மீது அதிக கவனம் செலுத்தவில்லை. இந்த ஒருபகுதியில் நாங்கள் இன்னும் கொஞ்சம் கூடுதலாக பயிற்சிபெற்றிருக்க வேண்டும் என்று உணர்கிறோம்.
தற்போது ஸ்பின்னர்களுக்கு எதிராக நீண்ட நேரம் ஆட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். சிலபல சிறிய விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறோம். ஏனெனில் சாம்பியன் அணியாக திகழ விரும்புகிறோம். எதிரணியினருக்கு ஒரு சிறு இடம் கூட அளித்துவிடக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறோம். நல்ல விஷயம் என்னவெனில் நிறைய டெஸ்ட் போட்டிகளில் ஆடவிருக்கிறோம் என்பதே.
உலகின் சிறந்த அணியாக விளங்க என்ன தேவைப்படும் என்பதை அறிந்துள்ளோம். இதில் நம்பிக்கை என்பது மிகவும் அவசியம். இளம் வீரர்களுக்கு பயம் இருக்கும், அடுத்த போட்டியில் ஆடுவோமா என்ற பாதுகாப்பின்மை இருக்கும், இந்த உணர்வுகளையெல்லாம் களைவது அவசியம்.
களத்தில் இறங்கும் போது அடுத்த 10 ஆண்டுகளுக்கு நான் இந்த இடத்தில்தான் இந்திய கிரிக்கெட்டில் இருக்கப் போகிறேன் என்ற தன்னம்பிக்கையுடன் இறங்க வேண்டும். அப்படித்தான் நாம் நம்மை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். தைரியமான கிரிக்கெட்டை ஆட வேண்டுமா ரிஸ்க் எடுக்கத் தயங்கக்கூடாது.
அச்சமின்றி ஆடினால் முடிவுகள் நம் வழியில் தானாகவே வந்து சேரும்.
நியூசிலாந்து அணியிடமிருந்து கடும் சவாலை எதிர்நோக்குகிறோம். அவர்கள் விட்டுக் கொடுக்காமல் ஆடும் அணி என்பதை நாங்கள் அறிவோம். அவர்களது பலங்களை அறிவோம், எனவே சாதக நிலைகளை அவர்களிடத்தில் விட்டுக் கொடுத்து விடக்கூடாது என்று திட்டமிட்டுள்ளோம்.
பிரெண்டன் மெக்கல்லம் தலைமையில் அந்த அணி அச்சமற்ற ஒரு கிரிக்கெட் வழிமுறையைக் கடைபிடித்து வந்தது, அவர் சென்ற பிறகும் அதே வழிமுறையை பின்பற்றி வருகிறது.
களத்தில் கிரிக்கெட் ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் ஆட வேண்டும். ஆனால் இது சொல்வதற்குச் சுலபம், ஆனால் மைதானத்தில் இறங்கியவுடன் அனைத்து தேவையில்லாத விஷயங்களும் வரும், உணர்ச்சிவயப்படும் சூழ்நிலைகள் ஏற்படும். அந்த அணியினர் இத்தகைய நிலைகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்களாக தெரிகின்றனர், இதனால்தான் கடந்த 2 ஆண்டுகளில் அச்சமற்ற கிரிக்கெட்டை அவர்களால் ஆட முடிகிறது. கேன் வில்லியம்சன் தன் அணியை சிறபாக வழிநடத்தி வருகிறார்” இவ்வாறு கூறிய விராட் கோலி, நாளைய அணி விவரங்களை தெரிவிக்க மறுத்து விட்டார்.