

90-வது அகில இந்திய அளவிலான எம்சிசி முருகப்பா தங்கக்கோப்பை ஹாக்கிபோட்டி இன்று முதல் வரும் 11-ம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப் பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஏர் இந்தியா, தமிழ்நாடு ஹாக்கி குழு , மும்பை ஹாக்கி அசோசியேஷன் ஆகிய அணிகளும் பி பிரிவில் ராணுவ லெவன், பஞ்சாப் வங்கி, ஆயில் நேச்சுரல் கேஸ் கமிஷன், ஹாக்கி கர்நாடகா, இந்தியன் ரயில்வேஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
லீக் மற்றும் நாக் அவுட் முறை யில் போட்டிகள் நடத்தப்படுகிறது. புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் தலா இரு அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அரை இறுதி ஆட்டங்கள் 10-ம் தேதியும், இறுதி போட்டி 11-ம் தேதியும் நடைபெறுகின்றன.
லீக் சுற்றில் தினமும் இரு ஆட்டங்கள் நடைபெறுகிறது. தொடக்க நாளான இன்று மாலை 4.15 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஏர் இந்தியா - தமிழ்நாடு ஹாக்கி குழு அணிகள் மோதுகின்றன. இதைதொடர்ந்து 6 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பி பிரிவில் உள்ள பஞ்சாப் வங்கி - ஹாக்கி கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டியில் முதல் இடம் வகிக்கும் அணிக்கு ரூ. 5 லட்சம் மற்றும் இரண்டாம் இடம் வகிக்கும் அணிக்கு ரூ. 2.50 லட்சம் ரொக்க பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்த பரிசுத்தொகை கடந்த ஆண்டைவிட இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர சிறந்த வீரர்கள் 5 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட உள்ளது.
இத்தகவலை மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் முருகப்பா குழுமத்தின் பிரதிநிதிகள் அறிவித் தனர்.