ரோஹித், அஸ்வின், ஷமி அசத்தலில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

ரோஹித், அஸ்வின், ஷமி அசத்தலில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
Updated on
2 min read

ரோஹித் சர்மா, முகமது ஷமி, அஸ்வின் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால், மேற்கிந்திய தீவுகள் அணியை இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

கொல்கத்தாவில் நடந்து முடிந்த இப்போட்டியில், ஆட்டத்தின் மூன்றாவது நாளிலேயே இந்தியா அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கு, டெஸ்ட் போட்டிகளில் முதல் முதலாக அடியெடுத்து வைத்துள்ள ரோஹித் சர்மா, முகமது சமி ஆகியோரது பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.

ஆட்டத்தின் மூன்றாவது நாளில், 4 விக்கெட்டுகள் மீதமிருக்க, 120 ரன்கள் முன்னிலையுடன் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி 129.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 453 ரன்கள் குவித்தது.

அறிமுக நாயகன் ரோஹித்

டெஸ்ட் போட்டியில் முதன் முதலாக அடியெடுத்து வைத்த ரோஹித் சதமடித்து, இந்திய கிரிக்கெட் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றார். தங்களது முதல் டெஸ்டில் சதமடித்த 14-வது இந்திய வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார்.

ரோஹித் 301 பந்துகளில் 177 ரன்கள் குவித்து, இந்திய அணியின் ரன் எண்ணிக்கையை வெகுவாக கூட்டினார்.

அஸ்வின் அபார சதம்

ரோஹித் சர்மாவுக்கு உறுதுணையாக இருந்து மறுமுனையில் ஸ்டாண்டிங் கொடுத்ததுடன், அவ்வப்போது பவுண்டரிகளை விளாசிய அஸ்வின் சதமடித்து வலுவான ஸ்கோருக்கு வித்திட்டார். அவர் 214 பந்துகளில் 124 ரன்கள் குவித்தார்.

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய புவனேஷ் குமார் 12 ரன்களையும், முகமது ஷமி ஒரு ரன்னையும், ஓஜா ஆட்டமிழக்காமல் 2 ரன்களையும் எடுத்தனர்.

மேற்கிந்திய தீவுகள் தரப்பில், ஷில்லிங் ஃபோர்டு 6 விக்கெட்டுகளையும், பெர்மவுல் 2 விக்கெட்டுகளையும், பெஸ்ட் மற்றும் காட்ரெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஷமி வேகம், அஸ்வின் சுழல்

பின்னர், 219 ரன்கள் பின்னடைவுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, அறிமுக வீரர் முகமது ஷமியின் வேகத்திலும், அஸ்வினின் சுழலிலும் சிக்கித் தவித்தது.

அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கெயில் 33 ரன்களையும், பவல் 36 ரன்களையும் எடுத்தனர். பிராவோ 37 ரன்களைச் சேர்த்தார். அதற்குப் பின், சந்திரபாலை தவிர அனைவருமே வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். சந்திரபால் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் எடுத்தார்.

முடிவில், மேற்கிந்திய தீவுகள் தனது இரண்டாவது இன்னிங்ஸ்சில் 54.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதன்மூலம், இந்திய அணி ஓர் இன்னிங்ஸ் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

புதிய வேகப் புயல் ஷமி

இந்தப் போட்டியின் அறிமுக வீரரான ரோஹித் சர்மா பேட்டிங்கில் அசத்த, மற்றொரு அறிமுக வீரரான முகமது சமி இரண்டு இன்னிங்ஸ்சிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தி வியப்பில் ஆழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2-வது டெஸ்ட் போட்டி வரும் 14-ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. அதுவே, சச்சினின் கடைசி டெஸ்ட் போட்டி ஆகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in