Published : 16 Jul 2016 06:58 PM
Last Updated : 16 Jul 2016 06:58 PM

யாசிர் ஷா 6 விக்கெட்டுகள்: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் முன்னிலை

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி 3-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து தன் முதல் இன்னிங்ஸில் 272 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. யாசிர் ஷா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இங்கிலாந்து பாகிஸ்தானைக் காட்டிலும் 67 ரன்கள் பின் தங்கியது.

இந்நிலையில் பாகிஸ்தான் தன் இரண்டாவது இன்னிங்சில் உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்திருந்தது.ஷான் மசூத் 20 ரன்களுடனும், அசார் அலி 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர், ஆனால் சற்று முன் உணவு இடைவேளைக்குப் பிறகு ஷான் மசூத் 24 ரன்களில் வோக்ஸ் பந்தில் ஸ்லிப்பில் குக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.முன்னதாக 11 பந்துகள் விளையாடி ரன் எடுக்காத நிலையில் மொகமது ஹபீஸ், பிராட் வீசிய ஷார்ட் பிட்ச், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை சீண்டி 2-வது ஸ்லிப்பில் ஜோ ரூட்டிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

ஷான் மசூதுக்கு 2 பந்துகளை உள்ளே கொண்டு வந்த கிறிஸ் வோக்ஸ் பிறகு ஒரு பந்தை இடது கைவீரரான ஷான்மசூதுக்கு குறுக்காகச் செலுத்தினார் எட்ஜ் ஆனது.

முன்னதாக இங்கிலாந்து 253/7 என்ற நிலையில் களமிறங்கியது, ஸ்டுவர்ட் பிராட் 11 ரன்களுடனும், வோக்ஸ் 31 ரன்களுடனும் இறங்கினர். ஆனால் பிராட் 17 ரன்கள் எடுத்த நிலையில் வஹாப் ரியாஸின் ஆக்ரோஷ பந்து வீச்சுக்கு பவுல்டு ஆனார். ஷார்ட் பிட்ச் பந்துகளை இரண்டு வீசி அவரை சற்றே நிலைகுலையச் செய்த ரியாஸ் பிறகு 2 யார்கர்களை வீசினார், இதில் 2-வது யார்க்கர் ஸ்டம்பைப் பதம் பார்க்க 17 ரன்களில் அவுட் ஆனார். பிராட். ஸ்டீவ் ஃபின் 5 ரன்கள் எடுத்து யாசிர் ஷா-வின் 6-வது விக்கெட்டாக எல்.பி.ஆகி வெளியேறினார்.

கடைசியில் பால் 4 ரன்களில் ரன் அவுட் ஆக, கிறிஸ் வோக்ஸ் 35 ரன்களில் ஒருமுனையில் தேங்கினார். இங்கிலாந்து 272 ரன்களுக்குச் சுருண்டது.

தற்போது பாகிஸ்தான் தன் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்துள்ளது. யூனிஸ் கான் 5 ரன்களுடனும், அசார் அலி 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

பாகிஸ்தான் 125 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x