

காயம் காரணமாக டிவைன் பிராவோ ஐபிஎல் 2017-லிருந்து விலகியதையடுத்து அவரது இடத்துக்கு ஆல்ரவுண்டர் இர்பான் பத்தானை ஒப்பந்தம் செய்துள்ளது குஜராத் லயன்ஸ் அணி.
பிப்ரவரி மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் தனது அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு எந்த அணியும் இர்பான் பத்தானை சீந்தவில்லை. ஆனால் இப்போது குஜராத் லயன்ஸ் மூலம் அவருக்கு மேலும் ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இர்பான் பத்தான் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர் டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், புனே ஆகிய அணிகளுக்கு ஆடியுள்ளார்.
இர்பான் பத்தான் 102 ஐபிஎல் போட்டிகளில் 80 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதுதவிரவும் 120.57 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் பின்னால் களமிறங்கி 1137 ரன்களையும் எடுத்துள்ளார். 2016 ஐபிஎல் இவருக்கு மோசமாக அமைந்தது, அதிலும் அதிகம் ஆடவில்லை.
கடந்த ஐபிஎல் போட்டித் தொடரில் பிளே ஆஃப் ஆடிய குஜராத் லயன்ஸ், இம்முறை 7 ஆட்டங்களில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்று 7-ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.