

ஜெட் ஏர்வேஸ் பைலட் பெர்னாட் ஹோஸ்லின் என்பவர் பயணி ஒருவர் மீது நிறவெறி வசைபாடியுள்ளது, பெண் ஒருவரைத் தாக்கியது மற்றும் மாற்றுத் திறனாளியை திட்டியது குறித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் இதனை உணர்வுபூர்வமாக பதிவு செய்துள்ள ஹர்பஜன் சிங், “இந்த பெர்னட் ஹோஸ்லின் என்ற ஜெட் ஏர்வேஸ் பைலட் என் சக இந்தியரை ’யூ பிளடி இந்தியன் கெட் அவுட் ஆஃப் மை பிளைட்’ என்று ஏசினார், ஆனால் அவர் சம்பாதிப்பது நம் நாட்டில்” என்று ட்வீட் செய்துள்ளார்.
அவர் மேலும் தனது ட்வீட்களில், “இந்தப் பைலட் நிறவெறியாளர் மட்டுமல்ல, பெண் ஒருவரை தாக்கியுள்ளார், மாற்றுத் திறனாளி ஒருவரை கண்டபடி ஏசினார், மிகவும் இழிவான செயல், வெட்கக்கேடான ஜெட் ஏர்வேஸ்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “இந்தப் பைலட் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், நம் நாட்டில் இன்னொரு முறை ஒருவர் இப்படி நடந்து கொள்வதை அனுமதிக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு முடிவு கட்டுவோம்”
என்று ஹர்பஜன் சிங் உணர்வுபூர்வமாக பதிவிட்டுள்ளார்.