Last Updated : 05 May, 2017 09:13 PM

 

Published : 05 May 2017 09:13 PM
Last Updated : 05 May 2017 09:13 PM

மலேசியாவிடம் தோற்று அஸ்லன் ஷா ஹாக்கி இறுதிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது இந்திய அணி

மலேசியாவில் நடைபெறும் சுல்தான் அஸ்லன் ஷா ஹாக்கித் தொடரில் மலேசியாவுக்கு எதிராக 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவி இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது இந்திய அணி.

வெள்ளியன்று முன்னதாக இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்தை வீழ்த்தியதையடுத்து இறுதிக்குள் நுழைய 2 கோல்கள் முன்னிலை பெற வேண்டிய கட்டாயத்தில் ஆடிய இந்திய அணி மோசமாக 0-1 என்று தோற்று இறுதி வாய்ப்பைக் கோட்டை விட்டது.

5 போட்டிகளில் 7 புள்ளிகளுடன் முடிந்த இந்திய அணி நாளை (சனி) நியூஸிலாந்துக்கு எதிராக 3-ம் இடத்திற்கான போட்டியில் ஆடுகிறது. முதலிடத்திற்கான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி இன்று ஒருங்கிணைந்து அணியாக உத்வேகத்துடன் ஆடவில்லை. மாறாக ஜப்பான் அணி ஆஸ்திரேலியாவை 3-2 என்று வீழ்த்தி அசத்தியது.

சுல்தான் அஸ்லன் ஷா ஹாக்கி தொடரில் ஆஸ்திரேலியா 9 முறை சாம்பியன் பட்டம் வெல்ல, இங்கிலாந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தொடரில் இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

தொடக்கத்தில் மலேசிய அணி இந்திய வட்டத்துக்குள் ஊடுருவினர், ஆனால் தடுப்பாட்டத்தினால் கோல் விழவில்லை, 9வது நிமிடத்தில் மலேசியா சார்பாக அளிக்கப்பட்ட பெனால்டி கார்னரை இந்தியா வீடியோ ரெஃபரல் செய்து முறியடித்தது.

முதல் 15 நிமிட ஆட்டம் இந்திய அணியிடம் எந்தவித பரபரப்பும் இல்லை, மந்தமாக ஆடியது. ஆனால் 2-வது கால்மணி நேர ஆட்டத்தில் இந்தியா 3 பெனால்டி கார்னர்கள் பெற்றது. ஆனால் மலேசிய கோல் கீப்ப்ர் சுப்பிரமணியம் குமார் 2 டைவ்களை அடித்து கோல் விழாமல் தடுத்தார்.

16-வது நிமிடத்தில் இந்திய வீரர்கள் மலேசிய வட்டத்தை ஊடுருவினர், இதன் மூலம் முதல் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது, ருபிந்தர்பால் சிங் கார்னர் ஷாட்டை எடுக்க மலேசிய கோல் கீப்பர் சுப்பிரமணியம் குமார் டைவ் அடித்துத் தள்ளிவிட்டார்.

இரண்டாவது பாதியில் மலேசியாவுக்கு 2-வது பெனால்டி வாய்ப்பு கிடைத்தது, இதுவும் அப்பீலுக்குப் பிறகுதான், ஆனால் இது கோலாகவில்லை.

அதன் பிறகு இடப்புறம் தல்வீந்தர் மற்றும் ஆகாஷ்தீப் கூட்டிணைந்து பந்தை எடுத்துச் செல்ல கோல் அருகே தவறு நிகழ்ந்ததில் 2 பெனால்டி வாய்ப்புகள் இந்தியாவுக்குக் கிடைத்தது, ஆனால் மலேசிய தடுப்பாட்டத்தை ஷாட்கள் ஊடுருவ முடியவில்லை.

நிறைய நேரங்களில் இந்திய அணி வீரர்களிடம் ஒருங்கிணைப்பு இல்லாததால் வட்டத்துக்கு உள்ளே சென்ற பிறகும் கூட தவறுகள் இழைத்தனர்.

ஆட்டம் மாறி மாறி வாய்ப்புகளாகச் சென்றது, ஆனால் இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை, கடைசியில் 50-வது நிமிடத்தில் மலேசியாவின் ஷாஹ்ரில் சாபா பெனால்டி கார்னரை கோலுக்குள் அடித்தார், மலேசியா 1-0 என்று முன்னிலை வகித்தது.

கடைசி 4 நிமிடங்களில் மிகுந்த பிரயாசையுடன் இந்திய அணியினர் மலேசிய பகுதிக்குள் 3 முறை ஊடுருவினர், 2 பெனால்டி கார்னர்கள் கிடைத்தது ஆனால் மலேசிய தடுப்பாட்டம் இந்திய அணிக்கு கோல் வாய்ப்பை மறுத்தது. கடைசியில் மலேசியா 1-0 என்று வென்றது, இந்திய அணி இறுதி வாய்ப்பை இழந்து நாளை (சனிக்கிழமை) 3-ம் இடத்துக்கான போட்டியில் விளையாடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x