

விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு தமிழக அணி முன்னேறியுள்ளது.
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தி யாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லி யில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் குஜராத் அணியை எதிர்த்து தமிழகம் மோதியது. டாஸில் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 49.4 ஓவர்களில் 211 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் ருஜுல் பட் 83 ரன்களைச் சேர்த்து கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். சமித் கோஹெல் 39 ரன்களையும், அக்சர் படேல் 18 ரன்களையும் சேர்த்தனர். தமிழக அணியில் விஜய் சங்கர் அதிகபட்ச மாக 48 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். ராஹில் ஷா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து ஆடவந்த தமிழக அணி, ஆரம்பம் முதலே உறுதியாக வெற்றி இலக்கை நோக்கி முன்னேறியது. கங்கா ஸ்ரீதர் ராஜூ 85 ரன்களையும், பாபா அபராஜித் 34 ரன்களையும், மொஹமது 35 ரன்களையும் குவிக்க 42.2 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்து 217 ரன்களைச் சேர்த்து தமிழக அணி வெற்றி இலக்கை அடைந்தது. இதன்மூலம் தமிழக அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றது.
பரோடா வெற்றி
டெல்லியில் நேற்று நடந்த மற்றொரு காலிறுதிப் போட்டியில் கர்நாடகாவை எதிர்த்து பரோடா அணி மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி, 48.5 ஓவர்களில் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் மயங்க் அகர்வால் 40, சமர்த் 44, பவன் தேஷ்பாண்டே 54 ரன்களைச் சேர்த்தனர். பரோடா அணியில் சிறப்பாக பந்துவீசிய குருனால் பாண்டியா 32 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து ஆடிய பரோடா அணி, 45.5 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 234 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவ்தார் 78 ரன்களையும், குருனால் பாண்டியா 70 ரன்களையும் சேர்த்தனர். 16-ம் தேதி நடக்கவுள்ள அரையிறுதிப் போட்டியில் பரோடாவுடன் தமிழக அணி மோதுகிறது.