Published : 27 Mar 2017 12:03 PM
Last Updated : 27 Mar 2017 12:03 PM

ஜடேஜாவின் அபார அரைசதத்துடன் இந்திய அணி 332 ரன்கள் எடுத்து ஆட்டமிழப்பு

தரம்சலா டெஸ்ட் போட்டியில் மேலும் விறுவிறுப்பு கூடியுள்ள நிலையில் 3-ம் நாளான இன்று இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 332 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ரவீந்திர ஜடேஜா, பகைமையான, ஆக்ரோஷ பந்து வீச்சுக்கு எதிராக 4 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 95 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து, சஹா (31) உடன் இணைந்து இருவரும் 96 ரன்களைச் சேர்த்தது இந்திய அணிக்குப் பலம் சேர்த்துள்ளது.

இன்று ஜடேஜா மிகவும் சவாலான ஹேசில்வுட், கமின்ஸ் பந்துவீச்சை எதிர்கொள்ள நேரிட்டது, ஷார்ட் பிட்ச் பந்துகள் பிறகு புல் லெந்த் என்று அவர்கள் வீச கமினிஸ் பந்தில் சுமார் 4 முறை இன்ஸ்விங்கரில் உள்விளிம்பில் பட்டதால் தப்பித்தார், இருமுறை இன்ஸ்விங்கர் திசை ஸ்டம்புக்கு வெளியே இருந்ததால் அவர் எல்.பி.ஆகவில்லை. ஒருமுறை லயன் பந்தில் எட்ஜ் எடுத்து ஸ்லிப்பைக் கடந்த் பவுண்டரி சென்றது.

சஹா மிகவும் கட்டுக்கோப்புடன் ஆடினார், ஜடேஜா கமின்சை ஒரே ஓவரில் தொடர் ஷார்ட் பிட்ச் பந்துகளை பவுண்டரி என்றும் ஒரு ஹூக் ஷாட்டில் டாப் எட்ஜ் சிஸ்க் ஒன்றையும் எடுத்து அசத்தினார். முன்னதாக லாங் ஆனில் லயனை சிக்ஸ் தூக்கினார்.

அவரை ஆஸி.வீரர்கள், பவுலர்கள் கேலி கிண்டல் செய்தனர், ஆனால் அவர் புன்னகையுடன் ஆட்டத்தை ஆடி அரைசதம் எடுத்து மட்டையை வாள்போல் சுழற்றினார்.

ஆனால் தொடர் ஷார்ட் பிட்ச் பந்துகளினால் ஜடேஜாவின் ஹெல்மெட்டைத் தாக்கினார் கமின்ஸ், அந்த ஓவரில்தான் கமின்ஸை அவர் சிக்சர், பவுண்டரி அடித்தார். ஆனால் கமின்ஸின் அடுத்த ஓவரில் ஷார்ட் பிட்ச் பந்தை எதிர்நோக்கிய ஜடேஜாவுக்கு ஏமாற்றும் வெளியே செல்லும் பந்து ஒன்றை வீசினார் கமின்ஸ் அதைத் தொட்டார், கெட்டார் ஜடேஜா. காரணம் கால்களை நகர்த்தவில்லை, டிரைவ ஆட நினைத்து எட்ஜ் ஆகி பவுல்டு ஆனது. அருமையான இன்னிங்ஸ் ஜடேஜாவுடையது.

ஜடேஜாவின் 7 அரைசதங்கலில் 5 டெஸ்ட் போட்டிகளை இந்தியா வென்றுள்ளது ஒன்று டிரா ஆகியுள்ளது, இப்போது என்ன ஆகிறது என்று பார்க்கவேண்டும்.

சஹா, ஸ்மித்தின் அபார கேட்சிற்கு இரையானார். 31 ரன்கள் எடுத்த அவர் கமின்ஸின் அராஜகான முகத்தை குறிவைத்த பவுன்சரை ஆடாமல் விட என்னவோ செய்தார் பந்து மட்டையின் மேல் விளிம்பில் பட்டு 2-ம் ஸ்லிப் தலைக்கு மேல் செல்ல ஸ்மித் பின்னால் சென்று பாய்ந்து ஒரு கையால் பிடிக்க முயல அது நழுவப் பார்த்தது. ஆனால் விடுவாரா ஸ்மித், அருமையான கேட்ச், சஹா அவுட். குல்தீப் யாத 7 ரன்களுக்கு லயன் பந்தில் அவுட் ஆனார். உமேஷ் யாதவ் 2 ரன்கள் நாட் அவுட். இந்தியா 332 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 32 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.

ஆஸி. அணியில் நேதன் லயன் 5 விக்கெட்டுகளையும் கமின்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x