Published : 20 Jan 2014 11:05 AM
Last Updated : 20 Jan 2014 11:05 AM

தொடரை வென்றது ஆஸி.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது ஆஸ்திரேலியா.

சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் கேப்டன் அலாஸ்டர் குக்-இயான் பெல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது. குக் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து.

இயான் பெல் 29, கேரி பேலன்ஸ் 15, போபாரா 21 ரன்களில் வெளியேற, மறுமுனையில் போராடிய மோர்கன் 54 ரன்கள் (58 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார். அவர் டேனியல் கிறிஸ்டியான் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார். இந்த கேட்ச்சை மிகத்தாழ்வாக கிறிஸ்டியான் பிடித்ததால் நடுவர் அவுட்கொடுத்தபோதும் டி.வி.ரீபிளேயை பார்க்கும் வரையில் மோர்கன் வெளியறவில்லை. ரீபிளே வருவதற்குள் ஆஸி. கேப்டன் கிளார்க் கிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார் மோர்கன்.

இதன்பிறகு பின்வரிசையில் பிரெஸ்னன் 29 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் சேர்க்க, இங்கிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் சேர்த்தது.

ஆஸ்திரேலியத் தரப்பில் கோல்ட்டர் நீல் 3 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஃபாக்னர், கிறிஸ்டியான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் மிட்செல் ஜான்சன் விளையாடவில்லை.

வார்னர் அதிரடி

244 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பிஞ்ச் 20 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தபோதும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 70 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் குவித்தார்.

அவர் 2-வது விக்கெட்டுக்கு ஷான் மார்ஷுடன் ஜோடி சேர்ந்து 78 ரன்கள் குவித்தார். இதன்பிறகு வந்த கேப்டன் மைக்கேல் கிளார்க் 28 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஷான் மார்ஷுடன் இணைந்தார் பிராட் ஹேடின். இந்த ஜோடி சிறப்பாக விளையாட ஆஸ்திரேலியா 28.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. ஷான் மார்ஷ் 89 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 71, பிராட் ஹேடின் 33 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் ஜோர்டான், போபாரா, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். டேவிட் வார்னர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 4-வது போட்டி வரும் 24-ம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது. ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை “ஒயிட் வாஷ்” ஆக்கிய ஆஸ்திரேலியா, ஒருநாள் தொடரிலும் அதேபோன்று ஒயிட் வாஷ் ஆக்கும் வாய்ப்பை நெருங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x