

களிமண் தரை ஆடுகளத்தில் நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து 5-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் விலகி உள்ளார்.
18 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ரோஜர் பெடரர் கடந்த ஆண்டு காயம் காரணமாக பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகியிருந்தார். சுமார் 6 மாத காலம் ஓய்வில் இருந்த அவர், புத்துணர்ச்சியுடன் திரும்பிய நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றார்.
இந்நிலையில் வரும் 22-ம் தேதி முதல் ஜூன் 11-ம் தேதி வரை களிமண் தரை ஆடுகளத்தில் நடைபெற உள்ள கிராண்ட் ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில் இருந்து பெடரர் விலகி உள்ளார். நீண்ட காலம் விளையாடும் நோக்கில் இந்த சீசனில் களிமண் தரை ஆடுகள போட்டியை தவிர்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரோஜர் பெடரர் தனது முகநூல் பதிவில், “கடந்த ஒருமாதமாக களத்திலும், களத்துக்கு வெளியேயும் கடினமாக உழைத்து வருகிறேன். வரும் காலங்களில் ஏடிபி உலக டூர் போட்டியில் கலந்து கொள்ளும் விதமாகவும், புல்தரை மற்றும் கடின தரை போட்டிகளுக்கு தயாராகும் விதமாகவும் இந்த சீசனில் களிமண் தரை ஆடுகள போட்டியை தவிர்ப்பதே சிறந்தது என கருதுகிறேன்.
இந்த ஆண்டின் தொடக்கம் எனக்கு வியக்கத்தக்க வகையில் அமைந்தது. ஆனால் எனது போட்டிகளை நீண்ட காலத்துக்கு திட்டுமிட்டு முன்னெடுத்து செல்வதில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளேன். களிமண் தரை ஆடுகளத்தில் நடைபெறும் ஒரே ஒரு தொடரில் பங்கேற்பது எனது டென்னிஸ் நலனுக்கும், இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளுக்கு தயாராகுவதற்கும் பலன் தராது” என தெரிவித்துள்ளார்.
35 வயதான பெடரர் இந்த சீசனில் மட்டும் 3 பட்டங்களை வென்றுள்ளார். ஆஸ்திரேலிய ஓபனை கைப்பற்றிய அவர் அதன் பின்னர் இந்தியன் வெல்ஸ், மியாமி ஓபனிலும் கோப்பையை வென்றிருந்தார். 18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை பெடரர் கைப்பற்றியிருந்தாலும் பிரெஞ்சு ஓபனில் அவர் அதிகம் சாதித்ததில்லை.
அதிகபட்சமாக கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் மட்டும் பட்டம் வென்றிருந்தார். பிரெஞ்சு ஓபனை புறக்கணித்துள்ள பெடரர் ஜூலை 3-ம் தேதி நடைபெற உள்ள விம்பிள்டன் போட்டியில் களமிறங்க உள்ளார். விம்பிள்டனில் அவர் 7 முறை பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.